சரவாக்கில், 369 கிராமப்புறப் பள்ளிகளில், சூரிய ஆற்றல் வழங்கல் மற்றும் நிறுவல் திட்டங்களுக்கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டில் தன்னைத் தற்காத்துக் கொள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஜெய்னி மஸ்லான், மூன்று வழக்குகளுக்கும் முதற்தோற்றத்தை உருவாக்குவதில் அரசு தரப்பு வெற்றி பெற்றிருப்பதைக் கண்டறிந்த பின்னர் இந்த முடிவை எடுத்தார்.
“மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஒரு முதன்மை வழக்கை நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளது.”
“எனவே, குற்றம் சாட்டப்பட்டவரைத் தற்காத்துக்கொள்ள இதன்மூலம் நான் அழைக்கிறேன்,” என்று ஜெய்னி கூறினார்.
69 வயதான ரோஸ்மாவின் வழக்கு விசாரணை, ஜெபக் ஹோல்டிங்ஸ் சென். பெர். முன்னாள் நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சம்சுட்டினிடம் இருந்து, RM187.5 மில்லியன் கேட்ட ஒரு குற்றச்சாட்டும், RM6.5 மில்லியன் கையூட்டு பெற்ற இரண்டு குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
5 பிப்ரவரி 2020-ல், தொடங்கிய இந்த வழக்கு, 33 நாள்கள் விசாரணை அமர்வின் போது 23 சாட்சிகளை முன்வைத்தது.
முன்னதாக, ரோஸ்மா தனது கணவருடன் காலை 9.20 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவர் ஜக்ஜித் சிங் தலைமையிலான வழக்கறிஞர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் அரசு தரப்பிற்குத் தலைமை ஏற்றார்.