கோவிட் -19 பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்டத் தடைகளைத் தளர்த்தி, பல்வேறு பொருளாதாரத் துறைகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்களவையையும் கூட்டுமாறு பல எம்.பி.க்கள் வலியுறுத்துகின்றனர்.
இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், அவசரநிலை குறித்து பேரரசருக்கு ஆலோசனை வழங்கும் இருகட்சி சார்ந்த குழு, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதை அவசரநிலை தடுக்கவில்லை என்பதை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும், அவசரக்கால சட்டம் (தேவையான அதிகாரங்கள்) 2021, அகோங்கிற்கு அவர் பொருத்தமானதாகக் கருதியதால் சிறப்புக் கூட்டங்களை நடத்த அனுமதித்தது என்று அவர் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய நோய்த்தடுப்புத் திட்டத்தை நடத்தவும் பல ஒதுக்கீடுகள் செலவிடப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் தனது பொறுப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டியத் தேவை உள்ளது என்றும் அவர் கூறினார்.
“பல நாடுகள், அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோய்த்தொற்று கண்ட நாடுகள் உட்பட, தங்கள் நாடாளுமன்றச் செயல்பாடுகளை நிறுத்தவில்லை,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தை இடைநிறுத்த அனுமதிக்கும் அவசரகாலச் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு செலாயாங் எம்.பி. வில்லியம் லியோங் அழைப்பு விடுத்தார்.
“அடிப்படை அரசியலமைப்பு ஜனநாயகத்தின் செயல்முறைக்கு இடையூறு ஏற்படாதவாறு, அவசரகாலச் சட்டத்தின் (தேவையான அதிகாரங்கள்) 14 மற்றும் 15 பிரிவுகளைத் திரும்பப் பெறுமாறு மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு அறிவுறுத்துமாறு நான் பிரதமரையும் அமைச்சரவையையும் கேட்டுக்கொள்கிறேன்.
“ஒரு ஜனநாயக நிர்வாகத்தை ஒத்திவைப்பதை நியாயப்படுத்த, பொது சுகாதார அவசரநிலைகளைப் பயன்படுத்துவது ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் தீர்வு அல்ல. இது ஒரு சர்வாதிகார அரசாங்கத்தின் தனிச்சிறப்பு,” என்று பி.கே.ஆர். எம்.பி. ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று, பெங்காராங் (அம்னோ) நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான அசாலினா ஓத்மான் சைட், சட்டமன்றத்தை இடைநீக்கம் செய்வதற்கான நிறைவேற்று முடிவால், சட்டமியற்றும் மன்றம் முடங்கிவிட்டதாகக் கூறி சட்டத்துறைத் தலைவர் இட்ரிஸ் ஹருனுக்குக் கடிதம் எழுதினார்.
மலேசிய நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேண்டுகோளில் கையெழுத்திட்ட ஆசியான் நாடுகளின் 90 எம்.பி.க்களின் ஆதரவும் இதற்குக் கிடைத்தது.
மேல்முறையீட்டில் கையெழுத்திட்ட முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.க்கள் தாய்லாந்து, இந்தோனேசியா, திமோர்-லெஸ்தே, கம்போடியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையில், கையெழுத்திட்ட எம்.பி.க்கள் அனைவரும் அந்தந்த நாடுகளின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் அவர்கள் ஆசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் பாஸ் இளைஞர் தலைவர் கைருல் நிஸாம் கிருட்டின் தெரிவித்தார்.
“கூடுதலாக, இதனை வலியுறுத்தியவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அல்ல.
“பாஸ் இளைஞர்கள் அவர்கள் யார் என்பதைப் பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை, ஆனால் இந்த வலியுறுத்தல் நம் சொந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வந்தது என்றால், நாட்டின் பிம்பத்தை வெளி உலகிற்கு அது மோசமாக கொண்டுச் செல்லும்.
“நம் நாட்டின் எம்.பி.க்கள், அரசியல் அனுதாபத்தைப் பெற, வெளிநாட்டினரை ‘ஒன்றிணைத்து’, நாட்டில் குழப்பத்தைத் தூண்ட விரும்புகிறார்கள் என்றால், அது மிகவும் இழிவான அணுகுமுறையாகும்,” என்றார் அவர்.