பி.டி.பி.ஆர். 2.0: மிக நீண்ட நேரம், ஈக்காத்தான் இளைஞர் அமைப்பு எதிர்ப்பு

இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் 2.0 (பி.டி.பி.ஆர்.) செயல்பாட்டை இரத்து செய்யுமாறு, மலேசிய ஈக்காத்தான் இளைஞர் மன்றம் (டி.பி.ஐ.எம்) கல்வி அமைச்சை வலியுறுத்துகிறது.

அதன் துணைத் தலைவர் ஷாஹிர் அட்ணான், பி.டி.பி.ஆர். 2.0-இன் அதிகபட்ச காலம் மிக நீண்டது, நடைமுறைக்கு மாறானது மட்டுமல்லாமல், இயங்கலை கற்றலுக்கு யதார்த்தமானதாக இல்லை என உணர்வதாகக் கூறியுள்ளார்.

எனவே, சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் புகார்களின் அடிப்படையில், இயங்கலையில் ஒரு மணிநேரம் மட்டுமே எடுக்கும் பி.டி.பி.ஆர். செயல்படுத்தலை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென டிபிஐஎம் கேட்டுக்கொள்கிறது.

“பி.டி.பி.ஆர். 2.0 தொடர்பான கல்வியமைச்சின் முன்மொழிவு, காலை 7:30-க்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில், 5 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும், இது இயங்கலை கற்றலுக்குச் சாத்தியமற்றது, யதார்த்தமற்றது என்று கருதப்படுகிறது.

“பிடிபிஆர் 1.0 இயங்கலையில் ஒரு மணிநேரம் ஆகும், மீதமுள்ள 2 மணிநேரம், முடக்கலையில் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் விளக்கினார்.

கல்வி அமைச்சின் இணையதளத்தில் பி.டி.பி.ஆர். 2.0 கால அட்டவணைக்கான செயல்படுத்தல் வழிகாட்டியின் அடிப்படையில், ஆரம்பப் பள்ளிகளுக்காக முன்மொழியப்பட்ட கால அட்டவணை காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், அதே சமயம் இடைநிலைப் பள்ளி கீழ்நிலை வகுப்புகளுக்கான (படிவம் 1 முதல் 3 வரை) நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் உள்ளது.

பி.டி.பி.ஆர். 2.0 மூலம், ஆசிரியர்கள் முதல் 30 நிமிடங்களுக்குப் பாடத்தின் உள்ளடக்கத்தை முன்வைப்பார்கள், பின்னர் அடுத்த 30 நிமிடங்களைப் பயிற்சி அமர்வுகளுக்கு ஒதுக்குவார்கள்.

பி.டி.பி.ஆர். அமர்வின் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும், இரண்டு முதல் ஐந்து நிமிடங்களும்; அடுத்த பாடத்திற்கு நுழையும் முன் 5 முதல் 10 நிமிடங்களும் ஆசிரியர்கள் குறுகிய இடைவெளிகளை ஒதுக்கி, மாணவர்களுக்கு இலகுவான உடற்பயிற்சிகளைச் செய்ய பணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இருப்பினும், மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவைகள் சங்கமும் (என்.யு.டி.பி) நீண்டக் கற்பித்தல் நேரத்தைக் கருத்தில் கொண்டு, பி.டி.பி.ஆர். 2.0-ஐ ஒத்திவைக்க அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் கருத்து தெரிவிக்கையில், பி.டி.பி.ஆர். 1.0-ஐ அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டியக் காரணங்களையும் ஷாஹிர் பட்டியலிட்டார்.

மாணவர்களின் இணைய அணுகல், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் நீண்ட நேரக் கற்பித்தலுக்காக முன் தயாரிப்புகளைச் செய்யும் ஆசிரியர்கள், உணர்ச்சி ரீதியான தாக்கங்களால் மனச்சோர்வடைவதும் அவற்றுள் அடங்கும்.

மூன்றாவதாக, இந்த அமலாக்கத்தினால் பெற்றோருக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். பி.டி.பி.ஆர். 2.0-ஐப் பின்தொடரும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைக், காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நிர்வகிக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் சிக்கல்களைக் கற்பனை செய்து பாருங்கள்.

“இயங்கலை கற்றலின் நிலை, பள்ளியில் நேரடிக் கற்றலில் இருந்து வேறுபட்டது,” என்று ஷாஹிர் விளக்கினார்.