அரசாங்கம் தீர்மானித்தபடி, விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.
முதலாளிகள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம் 2019-ஐ (சட்டம் 446) மீறியதாகக் குற்றம் சாட்டப்படலாம்; இது அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்ச தண்டமாக RM200,000 விதிக்க வகை செய்யுமென மனிதவள அமைச்சர் எம் சரவணன் எச்சரித்தார். இல்.
தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் போது, அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட, அவர்களிடம் இருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் அழைத்து வருமாறு மனிதவள அமைச்சு அனைத்து முதலாளிகளுக்கும் பரிந்துரைக்கிறது,” என்று அவர் இன்று ஒரு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“விடுதிகளில் அல்லது முதாலாளிகள் வழங்கிய தங்குமிடத்தில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யத் தவறினால், சட்டம் 446-இன் கீழ் முதலாளிகள் குற்றம் செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் – குறிப்பாக கட்டுமானத் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் – மலேசியாவில் இதுவரை மிகப்பெரியத் தொற்று திரளைகள் தோன்றக் காரணமாக இருந்தனர்.
ஆவணமற்ற குடியேறியவர்களை வைத்திருக்கும் குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்களிலும் கோவிட் -19 பாதிப்புகள பரவலாகக் கண்டறியப்பட்டன.
அரசாங்கம் ஆரம்பத்தில் முதலாளிகளிடம் வெளிநாட்டு தொழிலாளர்களின் நோய்த்தடுப்பு செலவுகள் அனைத்தையும் ஏற்குமாறு கேட்டுக்கொண்டது.
இருப்பினும், குடிமக்கள் அல்லாதவர்கள் உட்பட, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசக் கோவிட் -19 தடுப்பூசியை வழங்க அமைச்சரவைப் பின்னர் முடிவு செய்தது.
இதில் வெளிநாட்டு தூதர்கள், வெளிநாட்டவர்கள், மாணவர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான (யு.என்.எச்.சி.ஆர்) அட்டைதாரர்களும் அடங்குவர்.
மலேசியாவில் தற்போது 1.7 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர்.