நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) பகுதிகளில், சினிமா பொழுதுபோக்குத் துறையை மீண்டும் திறக்குமாறு, திறையரங்க உரிமையாளர் ஒருவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் (எல்.எஃப்.எஸ்) குழுமத்தின் உரிமையாளர், ஆர் துரைசிங்கம் பிள்ளை, பி.கே.பி.பி. அமலில் இருக்கும் மாநிலங்களில் கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் பிற சமூக ஒன்றுகூடல்களை அரசாங்கம் அனுமதித்ததைத் தொடர்ந்து, வருகை வரம்பு வளாகத்தின் 50 விழுக்காடு என்ற அளவில் சினிமா துறையையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
“கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடல்கள் அனுமதிக்கப்படும் போது, பி.கே.பி.பி. மாநிலங்களில் திரையரங்குகளையும் திறக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
“சினிமாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை, ஒரு திருமணம் அல்லது விருந்துக்கு வருபவர்களைவிட அதிகம் இல்லை.
“நாங்கள், திரையரங்க உரிமையாளர்கள், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும் கடுமையான எஸ்.ஓ.பி.க்களை ஏற்கவும் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
“திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும், நாற்காலிகள் மற்றும் தரையைச் சுத்தம் செய்ய எங்களுக்கு அதிக அளவு மனித சக்தி தேவைபடுகிறது, இல்லையெனில் பூஞ்சை வளர்ச்சியால் அரங்கம் சேதமடைந்துவிடும்.
“ஒளிவீச்சுக் கருவிகள், திரைகள் மற்றும் ஒலிபெருக்கிகள் போன்ற பிற உபகரணங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
“அது தவிர, நானும் மற்ற திரையரங்க உரிமையாளர்களும் பல படங்களுக்கு முன்கூட்டியேப் பணம் செலுத்தியுள்ளோம், ஆனால் திரையிட முடியவில்லை. சில படங்களுக்கு மூன்று மடங்கு வரையில் பணம் கொடுக்கப்பட்டது.
“எங்கள் துறை முற்றிலும் முடங்கிவிட்டது, ஆனால், மற்ற பணிகளுக்கு நாங்கள் இன்னும் பணியாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது,” என்ற அவர், திரையரங்குகளை மீண்டும் திறப்பது, அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.