உண்மையான அவசரநிலை இன்று தொடங்குகிறதா? – எஸ் அருட்செல்வன்

கருத்து l முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) தோமி தாமஸ் எழுதிய புத்தகத்திற்காக, கெராக்புடாயா பதிப்பகத்தின் கணினிகளைக் கைப்பற்றி காவல்துறை ஏன் அரசாங்கப் பணத்தை வீணடிக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியதை அவர் ஒருபோதும் மறுத்ததில்லை. அப்புத்தகம் மிகச் சிறப்பாக விற்பனையானது, அதில் அவர் மிகவும் பெருமிதம் கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன்.

கெராக்புடாயா அல்லது அதன் நிறுவனர் சோங் தோன் சின்-உம் புத்தகத்தைத் தங்கள் நிறுவனம் வெளியிடவில்லை என்பதை மறுக்கவில்லை. இவை அனைத்தும் தேவையற்ற கவனச்சிதறல் மற்றும் கோவிட் -19 போன்ற பிற கடுமையான சிக்கல்களைக் கையாள வேண்டியத் தருணத்தில், இவையெல்லாம் நேரத்தை வீணடிப்பதற்கானது, அல்லது இதுதான உண்மையான ஓர் அவசரநிலையின் தொடக்கமா?

ஓரினப்புணர்ச்சி II குற்றச்சாட்டில், அன்வர் இப்ராஹிம் மீதான தீர்ப்பு குறித்து நான் எழுதிய ஓர் அறிக்கை தொடர்பில், தேசத்துரோகக் குற்றச்சாட்டில் நான் கைது செய்யப்பட்டபோது, ​​எனது கணினியைப் பறிமுதல் செய்ய விரும்பியதால் காவல்துறையினர் என்னைத் தடுத்து வைப்பதற்கான காலநீட்டிப்புக்கு விண்ணப்பித்தனர்.

நான் அந்த அறிக்கையை எழுதவில்லை என்று ஒருபோதும் கூறவில்லை, உண்மையில் அதனை எழுதியதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்பதால், தடுத்து வைக்கத் தேவையில்லை என்று நான் மாஜிஸ்திரேட்டிடம் சொன்னேன்.

இதேபோல், ஓர் ஆதாரத்தை யாரும் சவால் செய்யாதபோது, ஏன் கணினியைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

இன்று கூட, மலேசியாகினி இணையச் செய்தித்தளம், அதன் வாசகர்களின் கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கண்டறியப்பட்டதால், RM500,000 தண்டம் விதிக்கப்பட்டது.

மலேசியாகினி அவர்கள் கருத்தல்லாத ஒன்றுக்காக, கடுமையாக தண்டிக்கப்பட்டது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும், ஆனால் அதைவிட மிக மோசமாக, மலேசியாகினிக்கு ஏஜி அலுவலகம் கோரியத் தொகையில் இரண்டு மடங்கிற்கும் மேலான தண்டத்தை நீதிமன்றம் விதித்தது.

தனது தீர்ப்பில், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரோஹனா யூசுப் கூறியதாவது: “தாக்குதல் அறிக்கைகள் (கருத்துகள்) நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலாகப் பரவியுள்ளன, அவற்றின் உள்ளடக்கம் பொய்யானது, அவதூறானது, அத்துடன் ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கியது. எனவே, RM500,000 தண்டம் நியாயமானது என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்றார்.

இன்றைய இந்தத் தீர்பின் மூலம், உலகம் முழுவதிலிருந்தும் அவர்களுக்குப் பாராட்டுகள் குவியுமென்று நீதித்துறை நினைக்கிறதா?

அவர்கள் மீதான விமர்சனங்களின் போது, நீதித்துறை மிகவும் தனிப்பட்டதாகவும் அற்பமானதாகவும் செயல்படுவதாகத் தெரிகிறது.

நீதித்துறை உண்மையில் உன்னதமானதாக இருந்தால், அவர்கள் மலேசியாகினி-க்கு, RM1-ஐ மட்டுமே தண்டமாக விதித்திருக்க வேண்டும். இது ஒரு நகைச்சுவையான விஷயம் அல்ல; ஏனெனில் முன்னர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்ட ஒரு வழக்கில் வென்ற முன்னாள் ஐ.எஸ்.ஏ. கைதிக்கு ஆர்.எம்.1 மட்டுமே பெயரளவு இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த முடிவு, எவ்வளவு உயர்ந்தத் தண்டனையாக இருந்தாலும், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக மட்டுமே பார்க்கப்படும். இது அடிப்படை சுதந்திரங்களுக்கு ஓர் அடியாகும்.

நமது ஃபெடரல் நீதிமன்றத்தின் ஆறு உயர் நீதிபதிகள் எடுத்த இந்த முடிவானது, இந்நாளை ஒரு சோகமான நாளாகப் பதிவு செய்துள்ளது.


எஸ் அருட்செல்வன், பிஎஸ்எம் துணைத் தலைவர்