மலேசியாகினி நன்கொடை பிரச்சாரம் இலக்கை அடைந்தது

மலேசியாகினி, அதன் RM500,000 நிதி திரட்டும் இலக்கை ஐந்து மணி நேரத்திற்குள் அடைந்துள்ளது.

அதன் வாசகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகளைப் பகிர்ந்தமைக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று தீர்ப்பளித்த ஃபெடெரல் நீதிமன்றம், மலேசியாகினி இணையத்தளச் செய்தி நிறுவனத்திற்கு RM500,000 தண்டம் விதித்து தீர்ப்பளித்தது. அந்தத் தண்டத்தைச் செலுத்த நிதி திரட்டும் பிரச்சாரத்தை மலேசியாகினி தொடங்கியது.

இந்நன்கொடை பிரச்சாரம் நிறைவுற்றது. பங்களிப்புகள் கணக்கிடப்பட்டு, பின்னர் அறிவிக்கப்படும்.

மிஞ்சியிருக்கும் நிதியை என்ன செய்வது என்று மலேசியாகினி ஆலோசித்து வருகிறது.

செய்தி தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரேமேஷ் சந்திரன், ஆதரவளித்த வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

“இந்தத் தொற்றுநோயின் போது, பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், எங்களுக்கு உதவிய வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

“இது இந்த நாட்டில் உள்ள சரியான, தவறான அனைத்தையும் காட்டுகிறது. மக்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்யவும், நாட்டைச் சிறந்ததாக்கவும், தவறுகளைச் சரிசெய்வதில் பங்களிக்கவும் தயாராக உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

மலேசியாகினி தொடர்ந்து, அச்சமின்றி, சார்பற்ற நிலையில், செய்திகளை வெளியிடும் என்றும், மக்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மலேசியர்களால் காட்டப்பட்ட தாராள மனப்பான்மையால் தான் நெகிழ்ந்து போனதாகக் கூறினார்.

மலேசியாகினி சட்டப் பாதுகாப்பு நிதிக்குப் பங்களித்தவர்களின் தாராள மனப்பான்மைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

“மலேசியாவில், பத்திரிகையாளர்களுக்குப் பெருகிவரும் விரோதமான சூழலில், எங்களால் முடிந்தவரை தொடர்ந்து எங்கள் பணிகளைச் செய்வதைத் தவிர எங்கள் மீதான உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற எங்களுக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.