எம்.பி.: தடுப்பூசி பெறும் முதல் குழுவாகக் கல்வியாளர்கள் இருக்க வேண்டும்

கல்விக்குழு ஒன்றை அமைத்துள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) செயல்படுத்துவதில் உள்ள பலவீனங்களையும் தடைகளையும் கண்டறிந்துள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், தடுப்பூசி பெறுபவர் வரிசையில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

“தொற்றுநோய் முற்றிலுமாக குறையாத நிலையில், இன்னும் பள்ளிக்குத் திரும்புவதற்கான முக்கிய காரணம் என்ன என்று பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் யோசித்துக்கொண்டிருப்பதால், கல்வியமைச்சை மிகவும் கவனமாக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், குறிப்பாக சிவப்பு மண்டலம் என வகைப்படுத்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் பகுதிகளில்.

“ஒரு காரணமுமின்றி வந்த அந்த அறிவிப்பு, மக்களிடையே ஆயிரத்து ஒரு கேள்விகளை எழுப்பியுள்ளது,” என்று சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக் சொன்னார்.

அந்த அறிக்கையில் அவருடன், கூலாய் எம்.பி. தியோ நீ சிங், செத்தியாவங்சா எம்.பி. நிக் நஸ்மி நிக் அஹ்மத் மற்றும் தம்பின் எம்பி ஹசான் பஹாரோம் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

நேற்று, கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின், இந்த மார்ச் முதல் பள்ளி அமர்வு துவங்குவதாக அறிவித்தார்.

அந்த அறிக்கை மூலம், கோவிட் -19 காலகட்டத்தில் பள்ளி முறையை மேம்படுத்த கல்வியமைச்சுக்கு அக்குழு சில பரிந்துரைகளையும் சமர்ப்பித்தது.

“பள்ளி திறக்கப்பட்டதும், ஆசிரியர்கள் கற்பிப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பள்ளிகள் இடமளிக்க வேண்டும்.

“அனைத்து நிர்வாகப் பணிகள், ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் மற்றும் வகுப்பறை பணிச்சுமை ஆகியன இப்போது முன்னுரிமையாக இருக்கக்கூடாது.

“தடுப்பூசி திட்டத்தில், ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும், ஏனெனில் பள்ளி மீண்டும் இயங்கும்போது, ​​ஆசிரியர்களும் முனைமுகப் பணியாளர்களாக, நாட்டின் எதிர்காலச் சந்ததியினருக்குக் கல்வி புகட்டுவட்டுவதில் ஈடுபடவுள்ளனர்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.