‘மலேசியாகினி வழக்கின் முடிவு நியாயமற்றது’ – எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள்

நியாயமான, சமநிலையான ஊடக வழிகாட்டுதல்களை வகுக்க, பல்வேறு தரப்பினர்கள் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று, ஒரு கூட்டு அறிக்கையில் 76 எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது, வாசகர்களின் கருத்துகள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளன எனக்கூறி, மலேசியாகினி இணைய செய்திதளத்தைக் குற்றவாளி என ஃபெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

“ஒரு செய்தி நிறுவனத்தை அதன் வாசகர்களின் கருத்துக்களுக்குப் பொறுப்புக்கூற வைப்பது நியாயமற்றது நாங்கள் கருதுகிறோம்.

“அக்கருத்துகள் செய்திதள நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட 12 நிமிடங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. கருத்துகளை நீக்க முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கை, பி.கே.ஆர்., டிஏபி, அமானா, வாரிசான் மற்றும் முன்னாள் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அமைச்சர்கள் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் மற்றும் மஸ்லீ மாலிக் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

அவர்களைப் பொறுத்தவரை, இந்த முடிவு மலேசியர்களுக்கு மிகவும் கவலையளிக்கும் ஒரு செய்தி, ஊடகச் சுதந்திரம் மற்றும் மத்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரமான பேச்சுரிமை ஆகியவைப் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

“ஊடகங்கள் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாகும். ஊடகச் சுதந்திரம் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் கோட்டைகளில் ஒன்றாகும்.

“எனவே, குறிப்பிட்ட சட்டத்தில், ‘அவமதிப்பு’ என்பதன் பொருளைக் கவனமாக வரையறுக்க, வழக்கறிஞர் மன்றம் விடுத்துள்ள அழைப்பை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம், இது சுதந்திரமான பேச்சு உரிமையை நிலைநிறுத்துவதற்கு ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்,” என்று அவர்கள் கூறினர்.

தவிர, சுயாதீனமான மற்றும் தைரியமான ஊடகங்கள், வெளிப்படைத் தன்மையுடனும் பக்கச்சார்பற்ற நிலையிலும் பொது சொற்பொழிவுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன என்பதையும் அவர்கள் அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தினர்.

“எனவே, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பயிற்சியாளர்களின் குரல் எழுப்பும் உரிமைகள், சட்டம் மற்றும் நீதித்துறையால் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியம்,” என்றும் அந்தக் கூட்டு அறிக்கை கூறியுள்ளது.