ஒரு வருடத்திற்கும் மேலாக, இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கோவிட்-19 தொற்றுநோயுடன் போராடியப் பிறகு, இறுதியாக இன்று காலை அதனைக் கையாள்வதற்கான தடுப்பூசி மலேசியாவில் ‘தரையிறங்க’ உள்ளது.
ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தடுப்பூசிகளின் முதல் தொகுதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு, எம்.ஏ.பி.கார்கோ சென். பெர்.-ஆல் (மாஸ்கர்கோ) இயக்கப்படும், மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச்.604-ன் ஏர்பஸ் 330-300 விமானத்தின் மூலம், இந்த வரலாற்று தருணம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடுப்பூசி பெல்ஜியத்தில் உள்ள ஃபைசர் ஆலையில் இருந்து வருகிறது, புர்ஸில் இருந்து தடுப்பூசியைக் கொண்டு வரும் விமானம், மலேசியா உள்ளிட்ட பிற ஆசியப் பசிபிக் நாடுகளுக்கு விநியோகிப்பதற்காக சிங்கப்பூரை வந்தடையும்.
312,390 தடுப்பூசி அளவுகளை ஏற்றி வரும் அந்த விமானத்தை, சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன், போக்குவரத்து அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் மற்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோர் வரவேற்பார்கள்.
அத்தடுப்பூசியின் வருகையுடன், மலேசியத் தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டம் தொடங்கவுள்ளது. நாட்டில் இதுவரை செய்யப்படாத மிகப்பெரியத் தடுப்பூசி திட்டமான இது, இன்னும் ஐந்து நாட்களில் (பிப்ரவரி 26) தொடங்கப்படும்.
கோவிட்-19 கிருமி தொற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, சிங்கப்பூருக்குப் பிறகு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொடக்க நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குவது, 32 மில்லியன் மலேசியர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டை நோயிலிருந்து விடுவிப்பதோடு, நிலைமையும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் படி, பிப்ரவரி 26 அன்று முதல் கட்டமாக, முனைமுகப் பணியாளர்கள், அதாவது சுகாதாரத்துறை ஊழியர்கள், மலேசிய ஆயுதப்படையினர், அரச மலேசியக் காவற்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், மலேசியத் தன்னார்வத் துறையினர் (ரேலா) மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
நாடு முழுவதும் மொத்தம் 600 தடுப்பூசி மையங்கள் நியமிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு வட்டாரத்திலும் அல்லது பகுதியிலும் ஏழு தடுப்பூசி போடுபவர்கள் பணியில் இருப்பார்கள்.
நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான இரண்டாம் கட்டத்தில், அதிக ஆபத்துள்ள குழுக்கள், அதாவது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தக் குடிமக்கள் மற்றும் நோய் பிரச்சினைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
மூன்றாவது கட்டமாக, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்டவர்களுக்கு, அடுத்த ஆண்டு மே முதல் பிப்ரவரி வரையில் வழங்கப்படும்.
பிரதமர் முஹைதீன் யாசின், இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் முதல் நாளில், பிற முன்னணி ஊழியர்களுடன் தடுப்பூசி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 11-ஆம் தேதி, ஃபைசர்-பயோஎன்டெக் பிஎன்டி1262பி தடுப்பூசியை, நாடு முழுவதும் வழங்குவதற்கான ஒப்பந்தம் அரசாங்கங்களிடையே, சுகாதார அமைச்சு மற்றும் ஃபைசர் (மலேசியா) சென். பெர்.-உடன் கையெழுத்தானது.
ஃபைசர் (மலேசியா) உடனான அந்த ஒப்பந்தத்தில், பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வழங்கப்படவுள்ள 12,799,800 தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வது, மலேசிய மக்களில் 20 விழுக்காட்டினருக்கு, ஒருவருக்கு இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.
- பெர்னாமா