1,200 கைதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்புவதைத் தடுக்கும் முயற்சியில், இரண்டு மனித உரிமைகள் குழுக்கள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில், நீதி மறுஆய்வைத் தாக்கல் செய்துள்ளன.
இந்த வழக்கை, எம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (Amnesty International Malaysia) மற்றும் அசைலம் அக்சஸ் மலேசியா (Asylum Access Malaysia) இரண்டும் இணைந்து இன்று தாக்கல் செய்தன.
ஒரு கூட்டு செய்தி அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தில் (யு.என்.எச்.சி.ஆர்) பதிவுசெய்யப்பட்ட மூன்று புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் குறைந்தபட்சம் தாய் அல்லது தந்தை இன்னும் மலேசியாவிலேயே இருக்கும் 17 சிறார்களின் விவரங்களும் அந்த வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவை கூறியுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டு, 1,200 மியான்மர் நாட்டினரிடையே, புகழிடம் நாடி வந்தோர் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்ற குடிநுழைவுத் துறையின் உத்தரவாதத்திற்கு முரணானது.
“மூன்று யு.என்.எச்.சி.ஆர். ஆவணம் வைத்திருப்போரும் மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என நம்புகிறோம், அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளும் அதுதான், அவர்களை வெளியேற்றுவது அவர்களின் உரிமைகளை மீறும் செயல்.
“குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரிப்பது சிறுவர் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் (சி.ஆர்.சி.) கீழான மலேசியாவின் உறுதிப்பாட்டை மீறும் செயலாகும், 9-வது பிரிவின் கீழ் இத்தகைய நடவடிக்கைகளை வெளிப்படையாக அது தடைசெய்கிறது. மலேசியக் குழந்தைகள் சட்டம் 2001 குழந்தைகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பைத் தெளிவாகக் கூறுகிறது,” என அசைலம் அக்சஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் தாம் ஹுய் யிங் கூறினார்.
இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும், ஸ்ரீனிவாசன் வழக்கறிஞர் & வழக்குரைஞர் நிறுவனத்தைச் சேர்ந்த அம்பிகா ஸ்ரீனிவாசன், லிம் வீ ஜீட் மற்றும் கோகுல் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் அமர்போன் சட்டநிறுவனத்தின் வழக்குரைஞர் நியூ சின் யூ-உம் பிரதிநிதிக்கின்றனர்.
முன்னதாக, மலேசியா 1,200 கைதிகளை மியான்மருக்கு நாடு கடத்த ஒப்புக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
மூன்று மியான்மர் கடற்படைக் கப்பல்கள் அவர்களை ஏற்றிச்செல்ல அனுப்பப்பட்டுள்ளன, அக்கப்பல்கள் நாளை மலேசியாவிலிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என யு.என்.எச்.சி.ஆர். மலேசியாவை வலியுறுத்தியுள்ளது.