எல்லை தாண்டுதல் குறித்த நூர் ஹிஷாமின் ஆலோசனையால் வர்த்தகர்கள் அதிர்ச்சி

மலேசியர்களில் 70 முதல் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடும் வரை, மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்கும் தடைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் பரிந்துரைகளை மறுஆய்வு செய்யுமாறு, 262 வணிகச் சங்கங்கள், வணிக மற்றும் வர்த்தக சம்மேளனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு கூட்டணி கேட்டுக் கொண்டது,

ஆச்சரியத்தை வெளிப்படுத்திய அந்தக் கூட்டணி – நாடு முழுவதும் 950,000 தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்களை உள்ளடக்கிய ‘பிசினஸ் சர்வைவல் குரூப்‘ (Business Survival Group) என்று அழைக்கப்படுகிறது – நூர் ஹிஷாமின் ஆலோசனை மிகவும் பயமுறுத்துவதாகவும், வணிகத் துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விவரித்தது.

“நூர் ஹிஷாமின் அறிக்கையில், ஒரு சமநிலையான பார்வை இல்லை என்பதில் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம், மாநிலங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளைத் தொற்றுநோய்களைக் கையாள்வதற்கான உத்திகளாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும், அது அனைத்து தரப்பினருக்கும் ஒரு சரியான சூழ்நிலையாக இருக்காது.

“அவரது அறிக்கை வாடிக்கையாளர்களைப் பயமுறுத்துகிறது, வணிகத்தை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது.

“எனவே, உடனடியாக மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அக்கூட்டணியின் தலைவர் அப்துல் மாலிக் அப்துல்லா, இன்று, கோலாலம்பூர் பங்சாரில், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

‘பிசினஸ் சர்வைவல் குரூப்’ -இன் ஆலோசகர்களான, மலேசியக் கேளிக்கைப் பூங்கா மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு மையத்தின் (மாட்ஃபா) தலைவர் ரிச்சர்ட் கோ மற்றும் மைடின் நிர்வாக இயக்குநர், டாக்டர் அமீர் அலி மைடின் ஆகிய இருவரும் இன்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பிப்ரவரி 26-ம் தேதி, நூர் ஹிஷாம், குறைந்தது 70 விழுக்காடு மக்களுக்குக் கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் வரை, எல்லை தாண்டியப் பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படலாம் என்று கூறினார்.

இதற்கிடையில், டாக்டர் அமீர் மைடின், அரசாங்கம் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையில் சமநிலைப்படுத்த வேண்டும் என்றார்.

“இது முக்கியமானது, நாம் மிகவும் கவனமாக இருக்க முடியாது. இது முழு விநியோகச் சங்கிலியையும் பாதிக்கிறது.

“நாங்கள் (வர்த்தகர்கள்) இல்லையென்றால், மறைமுகமாக அரசாங்கம் இல்லை. இப்போது கூட (எங்கள் வணிகம்) நாங்கள் தப்பிப் பிழைத்து வாழ்கிறோம், மாநில மற்றும் மாவட்டப் பயணக் கட்டுப்பாடுகள் இன்னும் ஒரு வருடம் தொடர்ந்தால் நாங்கள் (வணிகம்) இறந்துவிடுவோம்,” என்று அவர் கூறினார். .

மலேசியாவின் 70 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி போடும்வரை அரசு காத்திருந்தால், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் முழுவதும் தடையைத் திரும்பப்பெற நீண்ட காலம் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

“முக்கியமற்றவை என வகைப்படுத்தப்பட்ட சில வணிகத் துறைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன.

“முக்கியமற்றவை என வகைப்படுத்தப்பட்ட துறைகள் உட்பட, அனைத்து துறைகளுக்கும் வணிகம் செய்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும், செந்தர இயங்குதல் நடைமுறைகளை மட்டுமே அரசாங்கம் இறுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

‘பிசினஸ் சர்வைவல் குரூப்‘ கூட்டணி, இந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சை சந்திக்க திட்டமிட்டுள்ளது.