தடுப்பூசி : `சுகாதார ஊழியர்களுக்கு அல்லாமல், எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் முக்கியத்துவம்`

அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் சுகாதார ஊழியர்களுடன் ஒப்பிடும்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எம்.பி.க்களுக்கும் முதலில் தடுப்பூசி போடுவதன் தர்க்கம் என்ன என்று ஜொகூர் டிஏபி செயலவை உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹாவ் கேட்டார்.

அவ்விரு குழுக்களும் முதலாம் கட்ட ஆரம்பத் தடுப்பூசிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், சுகாதாரச் சேவையாளர்கள் கோவிட் -19 நோயாளிகளுடன் நேரடியாக செயற்பாட்டில் இருக்கிறார்கள் என்றார் பூ.

கோவிட் -19 நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்ய வேண்டிய தனியார் சுகாதார ஊழியர்களும் இதில் அடங்குவதாக அவர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்.பி.க்களை விட, மருத்துவ ஊழியர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்று தனியார் மருத்துவரும் முன்பு கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவருமான பூ கூறினார்.

“பல அமைச்சர்களும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும், பொது மற்றும் தனியார் சுகாதார ஊழியர்களுக்கு முன்னதாக கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

“இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த அரசியல் தலைவர்கள் உண்மையில், பொது மருத்துவப் பயிற்சியாளர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் வகை இரண்டு தடுப்பூசி முன்னுரிமைகளில் பட்டியலிடப்பட்டுள்ளனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சில மூத்த அரசாங்கத் தலைவர்கள் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர், ஆனால் உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் மற்றும் பெர்லிஸ் மந்திரி பெசார் அஸ்லான் மான் போன்ற தலைவர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தங்கள் இடங்களைக் கொடுத்தனர்.

சிறப்பு கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் உத்தரவாதக் குழுவின் (ஜே.கே.ஜே.ஏ.வி.) வழிகாட்டுதல்கள் குறித்து டாக்டர் பூ கருத்து தெரிவித்தார், அதில் முதலாம் கட்டத்தின் கீழ் தடுப்பூசிக்குத் தகுதியானவர்கள் யார் யார் என்ற வரையறையை அமைத்துள்ளது.

இந்த நேரத்தில் கோவிட் -19 தடுப்பூசி, மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுமானால், அவர்கள் நோயுற்ற தன்மை கொண்ட அதிக ஆபத்துள்ள குழுக்களின் பிரிவில் சேர்க்கப்பட வேண்டும், மேலும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருக்க வேண்டும்.

பூவின் கூற்றுப்படி, இது ஒரு “தலைவரின் சுயநலத்தை” காட்டுகிறது.

ஜே.கே.ஜே.ஏ.வி.யின் வழிகாட்டுதல்களின் படி, முதல் பிரிவில் நோயாளிகளைக் கையாள்வதிலும் சிகிச்சையளிப்பதிலும் நேரடியாக ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.

இவர்களில் மருத்துவ அதிகாரிகள், மருந்தாளுநர்கள், அறிவியல் அதிகாரிகள், தாதியர், ஊடுகதிர் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஊர்தி ஓட்டுநர்கள் போன்றோர் உள்ளனர்.

இரண்டாவது பிரிவில், மருத்துவப் பயிற்சியாளர்கள், தனியார் பல் மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவப் பயிற்சியாளர்கள் மற்றும் தனியார் ஆய்வகத் தொழிலாளர்கள் போன்ற பரந்த சுகாதார சமூகத்தினர் உள்ளனர்.

அவர்களோடு, அமலாக்க அதிகாரிகள், பல்வேறு நோய்கள் கொண்ட ஆசிரியர்கள், அமைச்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோரும் அடங்குவர்.