சீனரல்லாதவர்களும் மசீச-வில் இணை உறுப்பினராகச் சேரலாம்

சீனரல்லாத மலேசியர்கள் இனி மசீச-வில் இணை உறுப்பினராகச் சேரலாம்.

2019-ல், கட்சியால் முடிவு செய்யப்பட்ட இந்த விஷயம், மசீச அரசியலமைப்பில் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்த சங்கங்களின் பதிவாளர் (ஆர்.ஓ.எஸ்.) நடவடிக்கையைப் பின்பற்றுகிறது.

மசீச பொதுச்செயலாளர், சோங் சின் வூன் கூறுகையில், பொதுத் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் அல்லது 36 மாதங்களுக்கு முன்னர், கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்ற திருத்தங்களுக்கும் ஆர்.ஓ.எஸ். ஒப்புதல் அளித்துள்ளது.

“இந்தத் திருத்தங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

“இதன் பொருள், இனிமேல், சீனரல்லாத சமூகத்தினரையும் இணை உறுப்பினர்களாக மசீச ஏற்றுக்கொள்ளும்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, 2019-ஆம் ஆண்டில், மசீச துணைத் தலைவர் டாக்டர் மா ஹாங் சூன், இணை உறுப்பினர்களுக்கு, எந்தவொரு கூட்டத்திலும் அல்லது மாநாட்டிலும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.

பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவை, பூமிபுத்ரா அல்லாத மற்றும் முஸ்லிம் அல்லாத மலேசியர்களைத் தங்கள் கட்சியில் கூட்டாளர்களைக் கொண்டுள்ளன. அந்த இரு கட்சிகளின் இணை உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை.

இதற்கிடையில், கட்சியின் குறைந்தபட்ச வயது வரம்பை 16-ஆக குறைக்கும் திட்டத்தை உள்துறை அமைச்சு (கே.டி.என்.) ஆராய்ந்து வருவதாக சோங் கூறினார்.

மசீச உறுப்பினர்களின் தற்போதைய வயது வரம்பு 18 ஆகும்.

மசீச பல தசாப்தங்களாக, மலேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்து வருகிறது. இருப்பினும், 2008 முதல், அதற்கு பொதுமக்களின் ஆதரவு குறையத் தொடங்கியுள்ளது.

2018-ஆம் ஆண்டில், பாடாங் ரெங்காஸ் அம்னோ எம்.பி. நஸ்ரி அப்துல் அஜீஸ், சீன சமூகத்தின் பிரதிநிதி இப்போது டிஏபி, மசீச அல்ல என இந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவித்தார்.

“எனது பார்வையில், அதிக சீன இடங்களை வெல்லும் கட்சி சீனர்களின் குரலாக இருக்கும். அது மசீச அல்ல,” என்று அவர் கூறினார்.

டிஏபி – பல இனக் கட்சி – இது மலேசியாவில் உள்ள அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகிறது.

2018 பொதுத் தேர்தலில், மசீச தலைவர் வீ கா சியோங், 303 வாக்குகள் பெரும்பான்மையில், ஆயேர் ஈத்தாம் நாடாளுமன்ற ஆசனத்தை வென்ற கட்சியின் ஒரே வேட்பாளராக இருந்தார்.

2019-ல், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில், கட்சி இரண்டாவது நாடாளுமன்ற ஆசனத்தை வென்றது.