கூலிம், சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 0.447 ஹெக்டர் நிலத்தின் நிலை குறித்து இரண்டு முரண்பட்ட கருத்துகள் உள்ளன.
பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் (பிஐபிஜி) தலைவர், கே முனியாண்டி, 47, கூற்றின்படி, தற்போது அந்நிலத்தை அதன் உரிமையாளரிடமிருந்து, அதாவது கெடா மாநில மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து (பி.கே.என்.கே.) மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகைக்கு எடுக்க வேண்டும்.
இருப்பினும், கூலிம் பண்டார் – பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சைபுதீன் நாசுதியோ இஸ்மாயில் கூற்றுப்படி, முன்னாள் கெடா மந்திரி பெசார், மறைந்த அஸிஸான் அப்துல் ரசாக் அந்த நிலத்தைப் பள்ளிக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.
“சமீபத்தில், பள்ளி வாரியம் (எல்.பி.எஸ்.) பி.கே.என்.கே.-உடன் ஒரு ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டது, அதில் பள்ளி தற்போதுள்ள நிலத்தில் இலவசமாக இருக்கலாம் என்ற அனுமதியுடன், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“இருப்பினும், 2010-ம் ஆண்டில், பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்டியபோது, முன்னாள் மந்திரி பெசார் அந்நிலத்தைப் பள்ளிக்கு இலவசமாக ஒப்படைத்ததாக சைஃபுதீன் நாசுதியோன் கூறினார்.
“எனவே, பெற்றோர்கள் நாங்கள் குழப்பமடைந்த நிலையில், பள்ளியின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறோம்,” என்று முனியாண்டி மலேசியாகினியிடம் கூறினார்.
இந்தப் பள்ளி 1936-ல் கட்டப்பட்டது, இப்போது 173 மாணவர்கள் அங்கு பயில்கின்றனர்.
கடந்த மாதம், கெடா மந்திரி பெசார் சனுசி நோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, பள்ளி வாரியம் ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, பள்ளி நில நிலை பிரச்சினை சூடாகியது என்று முனியாண்டி விளக்கினார்.
“இதில் குழப்பம் என்னவென்றால், இன்று வரை எல்.பி.எஸ். கடிதத்தின் உள்ளடக்கங்களை வெளியிட மறுத்துவிட்டது.
“பள்ளி பிஐபிஜி-யின் தலைவரான நானே அக்கடிதத்தைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
“ஏன் இரகசியமாக வைக்க வேண்டும். பள்ளிக்கு நியாயமற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கலாம் என்பதால் பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
எல்.பி.எஸ். பிரதிநிதியைத் தொடர்பு கொண்டபோது, மார்ச் 7-ம் தேதி அவர்கள் தரப்பு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து விளக்கமளிக்கும் என்று மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.
“இப்போதைக்கு, நாங்கள் உங்களிடம் எதுவும் சொல்ல விரும்பவில்லை. மார்ச் 7 வரை காத்திருங்கள்… நாங்கள் விளக்கம் அளிப்போம்,” என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அந்தப் பிரதிநிதி கூறினார்.
பி.கே.என்.கே. விதிமுறைகள்
இதற்கிடையில், மலேசியாகினி பிப்ரவரி 8 தேதியிட்ட ஒப்பந்தக் கடிதத்தைக் கண்டது, அக்கடிதம் பள்ளியின் நெருங்கியத் தொடர்பின் மூலம் பெறப்பட்டது.
பி.கே.என்.கே. நிர்ணயித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு :
- தற்போதுள்ள கட்டிடங்களைத் தவிர, வேறு எந்தக் கட்டிடங்களும் அல்லது கூடுதல் வசதிகளும் அனுமதிக்கப்படாது.
- மூன்று மாத முன்கூட்டிய அறிவிப்பைக் கொடுத்து, எந்த நேரத்திலும் தற்காலிக இருப்பு அனுமதியைத் திரும்பப் பெறுவதற்கான உரிமையையும் பி.கே.என்.கே. கொண்டுள்ளது.
- அறிவிப்பைப் பெற்ற மூன்று மாதங்களுக்குள் பள்ளி எந்த இழப்பீடும் இன்றி உடனடியாக நிலத்தைக் காலி செய்ய வேண்டும்.
- பள்ளி காப்பீடு (insurans) கொண்டிருக்க வேண்டும்.
- பி.கே.என்.கே. நிறுவனத்தின் மீது சுமத்தப்படும் எந்தவொரு இழப்பீட்டிற்கும், பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பு.
- ஒப்பந்தம் காலாவதியாகும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக, தற்காலிக இருப்பு அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க, பள்ளி பி.கே.என்.கே.க்குக் கடிதம் அனுப்ப வேண்டும்.
- தற்போதைய தற்காலிக அங்கீகாரம், 2024 ஜனவரி 31 அன்று காலாவதியாகும்.
பி.கே.என்.கே. என்பது மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும், இது தேசியப் பொருளாதாரத்தை உருவாக்குகிறது மற்றும் பெருநிறுவன சமூக மேம்பாட்டுக்கு (சி.எஸ்.ஆர்.) பொறுப்பு வகிக்கிறது.
நாங்கள் உதவ முயற்சிக்கிறோம்
இதற்கிடையில், பள்ளி நில விவகாரத்தில் மாநில அரசு இனவெறி கொண்டிருக்கவில்லை என்று கெடா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி பிகே குமரேசன் மறுத்தார்.
“உண்மையில், நாங்கள் பள்ளிக்கு உதவ முயற்சிக்கிறோம்.
“பி.கே.என்.கே. மூன்று ஆண்டுகளாக இலவசமாகத் தற்காலிக அனுமதி அளித்தாலும், பள்ளி இன்னும் நிலத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்புண்டு.
“மூன்று ஆண்டுகளுக்குள், பள்ளி தனக்கு இலவச நிலம் வழங்குமாறு விண்ணப்பிக்கலாம்.
“மாநில அரசு கூட்டத்தில் ஒப்புக் கொண்டால், நிலம் பள்ளிக்கு வர்த்தமானி செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, அந்நிலத்தை 30 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட, பி.கே.என்.கே. பள்ளிக்கு RM163,000 கட்டணச் சலுகை வழங்கியதாகத் தெரிகிறது.
இருப்பினும், நிதி பற்றாக்குறையால், பள்ளி இந்த வாய்ப்பை நிராகரித்தது.
நிலைமையைச் சிக்கலாக்காதீர்கள்
இது தொடர்பான வளர்ச்சியில், நேற்று பள்ளிக்குச் சென்ற சைஃபுதீன் நாசுதியோன், நிலைமையைச் சிக்கலாக்க வேண்டாம் என்று சனுசியிடம் கேட்டுக் கொண்டதோடு, தற்காலிக இருப்பு அனுமதியை வழங்குவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் வலியுறுத்தினார்.
“2010-ல், கெடா மந்திரி பெசார் கூடுதல் பள்ளி கட்டிடங்களைக் கட்ட இலவச நிலத்தை வழங்கியுள்ளார்.
“உண்மையில், இந்தப் பிரச்சினை 2010-ல் கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்பட்டபோது தீர்க்கப்பட்டது, ஏனெனில் புதியப் பள்ளி கட்டிடத்தின் கட்டுமானம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளது. ஆக, இந்தப் பிரச்சனை ஏன் மீண்டும் எழுகிறது?
“2010 அல்லது 2011-ம் ஆண்டிற்கான ஆட்சிக்குழு கூட்டத்தின் கூட்ட அறிக்கைகளை மீண்டும் பார்க்கும்படி, நான் கெடா எம்பி-யைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
கூடுதல் கட்டடத்திற்கான நிதிக்குப், பள்ளி 2010-ல் விண்ணப்பித்ததாகவும், இந்த ஒதுக்கீட்டிற்குக் கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்ததாகவும் சைஃபுதீன் தெரிவித்தார்.
“ஆனால், அந்த நிலம் பள்ளிக்குச் சொந்தமில்லாததால் கட்டிடம் கட்ட முடியவில்லை. இதனால், பிஐபிஜி தலைவர் அப்போதைய கெடா எம்பி மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ் மணிகுமாருக்குக் கடிதம் எழுதியிருந்தார்
“எம்பி நிலம் வழங்க ஒப்புதல் அளித்ததால், கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டால் அது நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இது இப்போதய எம்.பி.க்குப் புரியவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சனுசி இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி என்ற முடிவைத் தக்கவைக்க விரும்பினால், அதற்கு ஒரு தற்காலிகத் தீர்வாக, இந்தப் பள்ளி நிலத்தை 30 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க, நிதி திரட்டலை தொடங்க உள்ளதாகவும் சைஃபுதீன் கூறினார்.