நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த, பேரரசருக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கும் என அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கேள்வி எழுப்பினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) அகற்றியதாலும், வணிகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டதாலும் அவர் இந்தக் கேள்வியைத் தனது முகநூலில் எழுப்பியுள்ளார்.
மார்ச் 5 முதல், கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான செந்தர இயங்குதல் நடைமுறைகளுடன், சுற்றுலா மையங்கள், திரையரங்குகள் போன்றவை செயல்பட அனுமதிக்கப்படும்.
இதற்கிடையில், மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல் முஸ்தபா பில்லா ஷா சுல்தான் அஹ்மத் ஷா, “அவசரகாலப் பிரகடனத்தின் போது, நாடாளுமன்றத்தைக் கூட்டம் தடை செய்யப்படும் எனும் சிலரின் கருத்து தவறானது” என்று கூறியதையும் அஹ்மத் ஜாஹித் சுட்டிக்காட்டினார்.
எனவே, மக்களவை அமர்வு அவசரக் காலத்திலும் நடைபெற வேண்டும் என்றார் அவர்.
“மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காகக் நாடாளுமன்றத்தைக் கூட்டுவோம். இது ஒரு ஜனநாயக நாடு,” என்று அவர் மேலும் கூறினார்.
கோவிட் -19 தொற்றை வெற்றிகரமாக கையாண்ட பின்னர், பொதுத் தேர்தலை நடத்துவதாக முஹைதீன் உறுதியளித்துள்ளார்.
தொற்றுநோயின் பரவல் இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது, நேற்று 1,555 புதிய நேர்வுகள் பதிவாகின, இது இந்த ஆண்டின் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.