கெடா, பேராக், நெகிரி செம்பிலானில் பி.கே.பி.பி. அமல்படுத்தப்படும்

கெடா, பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) அமலுக்கு வரவுள்ளது.

இத்தகவலை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று அறிவித்தார்.

“இருப்பினும், கெடா மாநிலத்தில், கோல முடா மற்றும் கூலிம் மாவட்டங்களிலும், நெகிரி செம்பிலான் சிரம்பானிலும், இன்னும் சில திரளைகள் செயலில் உள்ளதால் அங்கு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடரும்,” என்று அவர் புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு மற்றும் கிளாந்தானில், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மார்ச் 19 முதல் 31 வரையிலும், சரவாக்கில் மார்ச் 16 முதல் 29 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சரவாக் தவிர, மற்ற அனைத்து முடிவுகளும், மார்ச் 19 முதல் 31 மார்ச் 2021 வரை நடைமுறையில் இருக்கும், சரவாக்கில் நேற்று தொடங்கி 29 மார்ச் 2021 வரை நடைமுறையில் இருக்கும்.

பெர்லிஸ், மலாக்கா, பஹாங், திரெங்கானு, சபா ஆகிய 5 மாநிலங்களிலும் புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய 2 கூட்டரசுப் பிரதேசங்களிலும் பி.கே.பி.பி. (மீட்புநிலை) அமலாக்கம் தொடரும்.

சுற்றுலா அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பயண முகவர்களின் மூலம், பசுமை பயணக் குமிழி (green travel bubble ) வழி மீட்புநிலை பி.கே.பி. பகுதிகளிலிருந்து பிற மீட்புநிலை பி.கே.பி. இடங்களுக்குச் சுற்றுலா நடவடிக்கைகள் தவிர, எல்லை தாண்டும் நடவடிக்கைகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

சபா மற்றும் சரவாக் தவிர, மற்ற மாநிலங்களில் மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுகின்றது.