RM1.4 பில்லியன் சூரியத் திட்டத்திற்கு ஒப்புதல் கோருகிறார் ஜொகூர் மந்திரி பெசார்

கோத்தா திங்கி, பெங்கெராங்கில், RM1.4 பில்லியன் மதிப்புள்ள சூரிய ஆற்றல் பூங்காவிற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற ஜொகூர் தொடர்ந்து முயற்சிக்கும்.

மலேசியாவின் பெரிய அளவிலான சூரியக் (எல்.எஸ்.எஸ்) கொள்முதல் திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு முழுமையாக எடுக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசுக்கு சிறப்பு ஒதுக்கீடு கிடைக்கும் என்று ஜொகூர் மந்திரி பெசார் ஹஸ்னி முகமது கூறினார்.

“சூரிய ஆற்றலின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், அதனை விற்கவும் வாய்ப்புகள் உள்ளன, குறிப்பாக அண்டை நாடுகளுக்கு, இதனால் மாநில அரசுக்குப் புதிய வருவாய்கள் கிடைக்கும்,” என்று அவர் கூறினார்.

சூரியசக்தியைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக வழங்குவதன் மூலம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் ஜொகூர் மூன்றாவது பெரிய மாநிலமாக இருப்பதாகவும், சூரியனைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என்றும் பெனுட் சட்டமன்ற உறுப்பினரான ஹஸ்னி கூறினார்.

“இப்போது எங்களிடம் இரண்டு பெரிய தரவு மையங்கள் உள்ளன. தற்போது 3-ஆம் கட்டத்தில் உள்ள மெடினி, இஸ்கந்தர் புத்ரியில் அமைந்துள்ள தி.எம். ஒன் தகவல் மையம் (Pusat Data TM One), மற்றும் சீனாயில் அமைந்துள்ள கூலாய் இஸ்கண்டார் தரவு பரிமாற்றம் (Kulai Iskandar Data Exchange – Kidex) ஆகியவை.

“சூரிய ஆற்றல் இந்தத் தரவு மையங்களுக்கான ஆற்றலை உருவாக்கும் சக்தியைக் கொண்டுள்ளது, பின்னர் அவற்றை 4-ஆம் நிலைக்கு  மேம்படுத்தப்படலாம், இதனால் ஜொகூரில் தங்கள் தரவு மையங்களை அமைக்க அதிக நிறுவனங்கள் ஈர்க்கப்படும்,” என்று கூறிய அவர், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் கார்ப் நிறுவனத்தின் தரவு மையத்திட்டம் செடெனாக்கில் சீராக செயல்படுகிறது என்றார்.

“சூரிய மின் நிலையங்களால் உருவாக்கக்கூடிய ஒரு திட்டத்தைத் தயாரிப்பதன் மூலம், எரிசக்தி ஆணையத்திடம் சிறப்பு ஒதுக்கீட்டிற்கு நாங்கள் விண்ணப்பிப்போம்.

“நாங்கள் முன்னர் பரிந்துரைத்த முழு கொள்ளளவில் அது இல்லை, தொடக்கத்தில், 100 முதல் 150 மெகாவாட் வரை இருக்கலாம். இந்த முன்மொழிவு அமைச்சரவையில் பரிசீலிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா