‘முஹைதீனுக்குப் பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளவேத் துணிவில்லை, மகாதீருடன் எப்படி விவாதிப்பார்’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவுக்கு ஆதரவான சிலர், பிரதமர் முஹைதீன் யாசினுக்கும் பெஜுவாங் தலைவருக்கும் இடையே விவாதம் நடைபெறச் சாத்தியமில்லை என்று சூசகமாகத் தெரிவித்தனர்.

மகாதீருடன் விவாதிக்க முஹைதீனுக்குச் சவால் விடுத்த முன்னாள் துணை பிரதமர் அப்துல் கஃபர் பாபாவின் மகன் தம்ரின் கஃபரின் திறந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்த மகாதீரின் அரசியல் செயலாளர் அபுபக்கர் யஹ்யா, சவாலை ஏற்க முஹைதீன் துணிவதில்லை என்றார்.

லங்காவி எம்.பி. இந்த முன்மொழிவுக்கு உடன்படுவாரா என்றும், முஹைதீன் உடனான விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்றும் மலேசியாகினி கேட்டபோது, ​​”இனி அதற்குத் தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

“பத்திரிகையாளர்களைக் கூட எதிர்கொள்ள விரும்பவில்லை, துன் மகாதீருடன் விவாதம் ஒருபுறம் இருக்கட்டும்,” என்று அபுபக்கர் கூறினார்.

அதே நேரத்தில், பெஜூவாங் தகவல் பிரிவு தலைவர் உல்யா அகமா ஹுசாமுதினும் இந்த விஷயம் நடக்கும் என்று நினைக்கவில்லை என்றார்.

“இது இதுவரை விவாதிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

மார்ச் 21 அன்று, தம்ரின் ஓர் அறிக்கையில் முஹைதீன் மகாதீர் இடையேயான விவாதத்திற்குச் சவால் விடுத்தார், அது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முஹைதீனின் இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

அவரைப் பொறுத்தவரை, இரண்டு கடிதங்களும் போஸ் லாஜு மற்றும் ஜிடெக்ஸ் அஞ்சல் சேவைகளின் தகவல் கண்காணிப்பு அடிப்படையில் முஹைதின் பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

அந்தக் கடிதத்திற்கு முஹைதீன் பதிலளிக்கத் தவறிவிட்டார், இது அந்த பெர்சத்து தலைவர் உண்மை நிலவரத்தை எதிர்கொள்ள அஞ்சுகிறார் என்பதைக் காட்டுகிறது.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ​​கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஷெரட்டன் நகர்வு மூலம் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் என்ன நடந்தது என்பது பற்றிய விளக்கத்தைப் பெறுவதே இதன் நோக்கம் என்று தம்ரின் கூறினார்.

“நாங்கள் அரசாங்கத்தின் மாற்றம், மகாதீர் ஏன் இராஜினாமா செய்தார், அவர் ஏன் (முஹைதீன்) பொறுப்பேற்றார் என்பது பற்றி பேச விரும்புகிறோம்.

“யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள சிறந்த வழி இது.

“அவர் பதிலளிக்க முடிந்தால், அவர் பதிலளிப்பார். அதுவே சிறந்த வழி, மக்கள் நீதிபதிகளாக இருப்பார்கள்,” என்றார்.