அவரை வீழ்த்த ஒரு ‘குழு’ முயற்சிப்பதாகக் கூறிய நாட்டின் காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமீத் படோருக்கு ஆதரவு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஒரு முகநூல் பதிவில், நாட்டில் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் அப்துல் ஹமீதுக்கு ஆதரவு தெரிவிக்கக் கடிதம் அனுப்பியுள்ளதாக அன்வர் கூறினார்.
“சமீபத்தில், காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் மற்றும் அரச மலேசியக் காவற்படை பற்றிய செய்திகள் மக்கள் கவனத்தை ஈர்த்தன.
“இது தொடர்பாக, நாட்டில் எந்தவொரு குற்றத்தையும் ஒழிக்கும் முயற்சியில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க கடிதம் அனுப்பியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.
பி.டி.ஆர்.எம் சமூக அமைப்பில் மிக முக்கியமான குழு என்றும், நாட்டில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஓர் அளவுகோல் என்றும் அந்த போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர், கூறினார்.
“எனவே, போலிஸ் படையின் நேர்மை, சுதந்திரம், நம்பகத்தன்மை மற்றும் திறன் குறித்து அவர் கூறியக் கூற்றை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
“அவர் நம்பிக்கையை நிறைவேற்றவும், தற்போதைய சவால்களை அவர் எதிர்கொள்ளவும் நான் பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
மார்ச் 18 அன்று, அப்துல் ஹமீத் ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார், “இளம் அதிகாரிகள்” குழு ஒன்று அவரை வீழ்த்துவதற்காக முயல்வதாக அவர் கூறினார்.
சிறப்பு பிரிவின் முன்னாள் மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, அவர்களின் நடவடிக்கைகள் தனிப்பட்ட சுயநலன்களுக்காக நகர்த்தப்படுகின்றன.
இருப்பினும், ‘அக்குழுவில்” இருப்பவர்கள் குறித்து அப்துல் ஹமீத் வெளியிடவில்லை.