பெர்சே : ‘வாக்கு18’ ஆர்ப்பாட்டப் பங்கேற்பாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்

கடந்த வார இறுதியில், ‘வாக்கு18’ பேரணியில் பங்கேற்றவர்களை ‘மிரட்டுவதை’ நிறுத்துமாறு தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி (பெர்சே 2.0) காவல்துறைக்கு அழைப்பு விடுத்தது.

பேரணிக்கு 10 நாட்கள் அறிவிப்பு வழங்கத் தவறியதற்காக அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தின் பிரிவு 9 (5)-இன் கீழ், தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (தொற்று உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) (திருத்தம்) ஒழுங்குமுறைகள்) (மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாடு) (எண் 4) 2021 கடைபிடிக்கத் தவறியதற்காக, பேரணியில் பங்கேற்ற 11 பேரை விசாரிப்போம் என்று போலிசார் தெரிவித்ததையடுத்து பெர்சே இதனைக் கூறியுள்ளது.

“மார்ச் 27-ல் நடைபெற்ற வாக்கு18 கோரிக்கை பேரணியில் கூடியிருந்த இளம் ஆர்வலர்கள் மீது மிரட்டல் மற்றும் அழுத்தத்தை நிறுத்துமாறு பெர்சே 2.0 அரச மலேசிய காவல்துறைக்கு (பி.டி.ஆர்.எம்) அழைப்பு விடுத்துள்ளது.

“பி.டி.ஆர்.எம். மக்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை மதிக்க வேண்டும், கோரிக்கை ஒருபுறம் இருக்க, வாக்கு18-ஐ அமல்படுத்துவது தொடர்பான நாடாளுமன்ற முடிவை மதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதை..” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலைத் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும், மக்களுக்குப் பேசுவதற்கும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் உரிமை அளிக்கும் மத்திய அரசியலமைப்பின் 10-வது பிரிவை மதிக்க வேண்டும் என்றும் பெர்சே நினைவுபடுத்தியது.

“இது போன்ற மிரட்டல் நடவடிக்கைகள் காவல்துறையினரின் நேரத்தையும் வளத்தையும் வீணடிப்பதாகும், அவை மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தான குற்றச் செயல்களுக்கு எதிராகத் தூண்டப்பட வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டவர்களில், செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவும் ஒருவர்.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து இளைஞர்கள் அமைதியான முறையில் ஒன்றுகூடியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் தான், நாடாளுமன்றத்திற்கு வந்ததாக இயோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“2019 ல், நாடாளுமன்றத்தில் வாக்கு18-ஐ செயல்படுத்த ஒப்புக்கொண்ட எம்.பி.க்களில் நானும் ஒருவர்.

“ஊடகங்களில் பரவலான செய்தியைப் பெற்ற ஒன்று எனது நாடாளுமன்றத் தொகுதியில் நடக்கிறது, பொறுப்புள்ள ஓர் எம்.பி.யாக, அது என்ன என்பதைப் பார்க்க நான் அங்குச் சென்றேன். இருப்பினும், நான் சென்ற நேரத்தில், அந்த இளைஞர்கள் கலைந்து செல்ல முற்பட்டிருந்தனர்.

“எனது பார்வையில், வாக்கு18-ஐ அமல்படுத்த நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப, 18 வயது நிரம்பிய ஒருவர் வாகனம் ஓட்டவோ அல்லது திருமணம் செய்யவோ அனுமதிக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்திருக்கும் போது, அவர்களுக்கு வாக்களிக்கவும் உரிமை உண்டு,” என்று அவர் கூறினார்.

2019-ல் நாடாளுமன்றம் ஒரு முடிவை எடுத்தது, ஆனால் இப்போது அது கடைப்பிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

“இந்த இளைஞர்களுக்கு நாடாளுமன்றம் தவிர தங்கள் விரக்தியை வெளிப்படுத்த வேறு இடமில்லை.

“இந்த இளைஞர்கள் அமைதியான முறையில் ஒன்றுகூடி கலைந்து சென்றனர், முகக்கவரி அணிந்திருந்தனர், அனைத்து போலிஸ் அறிவுறுத்தல்களுக்கும் இணங்கினர், எனவே போலிசார் இதனைக் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறிய அவர், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றார்.

இதற்கிடையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்குச் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டதாக அமானா இளைஞர் தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின் தெரிவித்தார்.