அம்னோ சுங்கை சிப்புட் இருக்கையை ஒப்படைக்கச் சொல்வது விசித்திரமானது – ம.இ.கா.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதில் போட்டியிட, அம்னோவுக்கு வழிவிட வேண்டுமென புத்ரி அம்னோ தலைவர் நோராஸூரா அப்துல் கரீம் அழைப்பு விடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது என்று ம.இ.கா. தலைமைச் செயலாளர் எம் அசோஜன் தெரிவித்தார்.

ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் (ஜி.இ), ம.இ.கா. தலைவர்கள் இந்த இடத்தில் பாரம்பரியமாக போட்டியிடுவதாக அசோஜன் கூறினார்.

“எனவே, அடுத்த ஜி.இ.யில், ம.இ.கா.வைத் தனது இடத்தை அம்னோவிடம் ஒப்படைக்கச் சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அவர் இன்று ம.இ.கா. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ம.இ.கா. சுங்கை சிப்புட் இருக்கையை அம்னோவிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்ற நோராஸுராவின் அழைப்பு குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ச்சியாக மூன்று பொதுத் தேர்தல்களில், ம.இ.கா. அத்தொகுதியைக் கைப்பற்றத் தவறியதை அடுத்து, நோராஸூரா இந்த அழைப்பை விடுப்பதாகத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மூன்று முறை தோல்வி கண்டதை ஒரு காரணமாக கூறி, அந்த இருக்கையை ஒப்படைக்கக் கோரக்கூடாது என்று அசோஜன் கூறினார்.

“அம்னோவும் மூன்று தவணைகளாக பல இடங்களை இழந்துள்ளது. ஆக, மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளும் அந்த இடங்களை ஒப்படைக்க அம்னோவிடம் கேட்கலாமா,” என்று அவர் கூறினார், எந்தவொரு முடிவும் பிஎன் உச்சமன்றத்தால் எடுக்கப்பட வேண்டும், தனிப்பட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது,” என்றார் அவர்.

சுங்கை சிப்புட் இருக்கையை ம.இ.கா. முன்னாள் தலைவர் வி.தி.சம்பந்தன் 1959 முதல் 1974 வரையிலும் எஸ் சாமிவேலு 1974 முதல் 2008 வரையிலும் வைத்திருந்தனர்.

இருப்பினும், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) வேட்பாளர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், 2013-ல் அத்தொகுதியைச் சாமிவேலுவிடம் இருந்து கைப்பற்றினார். கடந்த ஜி.இ.யில், பி.கே.ஆர். அத்தொகுதியை வென்றெடுத்தது.

தற்போதைய ம.இ.கா. தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன், அடுத்த ஜி.இ.யில் அத்தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்னோ கேமரன்மலையைக் ‘கடன் வாங்கியுள்ளது’

கேமரன் மலை இருக்கையின் நிலை குறித்து கேட்டபோது, அந்த இடம் இன்னும் அம்னோவிடம் ‘கடனில்’ உள்ளது என்றார் அசோஜன்.

“ம.இ.கா. அந்த இடத்தை இன்னும் கடனாகவே வழங்கியுள்ளது. இதற்குக் காரணம் பி.என். இன்னும் இடங்களை விநியோகிக்கவில்லை. எந்தவொரு முடிவும் பி.என். உச்ச தலைமைக் குழுவால் எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

2019 இடைத்தேர்தலில் (பி.ஆர்.கே), கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில், பி.என் வேட்பாளர் ரம்லி முகமட் நோர் போட்டியிட்டார், அப்போது அவர் அம்னோவில் சேரவில்லை.

ஜி.இ.14-இல், அந்தத் தொகுதியில் ஊழல் நடைமுறைகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ம.இ.கா. துணைத் தலைவர் சி.சிவராஜின் வெற்றியைத் தேர்தல் நீதிமன்றம் இரத்து செய்வதாக அறிவித்தது. அதனையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது,

இதற்கிடையில், இது போன்ற “கற்களை எறிந்துவிட்டு, கைகளை மறைக்கும்” தந்திரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அம்னோவின் உயர் தலைமைக்கு சிவராஜ் நினைவுபடுத்தினார்.

ஆயினும் அவர், ‘மறைக்கப்பட்ட கை’ என்று யாரைக் குறிப்பிட்டார் என்பதை விளக்கவில்லை.

பதிவுக்காக, பெர்சத்து அல்லது பக்காத்தான் ஹராப்பான் உடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா என்பது குறித்து அம்னோ தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று விக்னேஸ்வரன் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு நோராஸுராவின் அழைப்பு வந்தது.

இதற்கிடையில், அந்த இடத்தை அம்னோவிடம் ஒப்படைத்தால், பிஎன் வெற்றிக்கு அது உத்தரவாதம் அளிக்குமா என்று சுங்கை சிப்புட் ம.இ.கா. தலைவர் எம் நேருஜி கேள்வி எழுப்பினார்.

நேருஜியின் கூற்றுப்படி, ம.இ.கா.-வின் புகழ்பெற்ற இடங்களில் போட்டியிடும் போது அம்னோ தோல்வியடைந்த வரலாறுகள் உள்ளன.

“ம.இ.கா. போட்டியிட்ட பேஹ்ராங் மற்றும் பாசீர் பாஞ்சாங் சட்டமன்ற இடங்கள் (பேராக்) அம்னோவுக்கு வழங்கப்பட்டன, கடந்த ஜி.இ.யில் அத்தொகுதிகளில் அம்னோ தோல்வி கண்டது.

“புத்ரி அம்னோவின் அறிக்கை உண்மையில் ‘குழந்தைத்தனமானது’. வாக்காளர்கள் அடிப்படையில், அம்னோவை விட (சுங்கை சிப்பூட்) வெற்றி பெற அதிக வாய்ப்பு ம.இ.கா.வுக்கு உள்ளது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

சுங்கை சிப்புட் இருக்கை 36 விழுக்காடு சீனர்கள், 34 விழுக்காடு மலாய், 21 விழுக்காடு இந்தியர்கள் மற்றும் 9 விழுக்காடு பிற இன வாக்காளர்களைக் கொண்டுள்ளது.