இரு கட்சிகளும் சில சமயங்களில் “தீவிரப் போக்குடன்” செயல்படுகின்றன என்று கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் குற்றச்சாட்டுகளை டிஏபியும் மசீசவும் மறுத்துள்ளன.
மசீச தலைமைச் செயலாளர் சோங் சின் வூன் மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இருவரும் தனித்தனி அறிக்கைகளில், தங்கள் கட்சி அதன் உறுப்பினர்களின் இன அமைப்பைப் பொருட்படுத்தாமல், ஒரு மிதமான போக்கைக் கடைப்பிடிப்பதாகக் கூறினர்.
“நாங்கள் எப்போதும் நடுத்தர மையத்தை ஆதரிக்கிறோம்,” என்று சோங் கூறியதாக ஃபிரி மலேசியா டூடே செய்தி தளம் மேற்கோளிட்டுள்ளது.
அவரைத் தவிர, அனைவரையும் தீவிரவாதிகள் என்று மகாதீர் அடிக்கடி முத்திரை குத்தி வருகிறார் என்று சோங் கூறினார்.
“மலேசியர்கள் எங்களை மதிப்பிடட்டும்,” என்று அவர் நேற்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், டிஏபி மீதான மகாதீரின் குற்றச்சாட்டுகள் “தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் குழப்பமானவை,” என்று இன்று காலை ஓர் அறிக்கையில் லிம் கூறினார்.
“மகாதீர் அவ்வாறு கூறியது தவறு, ஏனென்றால் டிஏபி ஓர் இனம் மற்றும் மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிக்கும் பல்லினக் கட்சி என்பதை வரலாறு மற்றும் உண்மைகள் நிரூபிக்கின்றன.
“மற்ற விஷயங்களை விட தன்னை ஒரு மலாய்க்காரராகப் பார்க்கும் பிரதமர் முஹைதீன் யாசின் போலல்லாமல், அனைவரையும் மலேசியர்கள் என்ற வகையிலேயே டிஏபி பார்க்கிறது,” என்று அவர் கூறினார்.
அவர்களின் சேவை வரலாறு ஒருபுறம் இருக்க, இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், மலேசியர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் பாகுபாடு காட்டாமல் டிஏபி செயல்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
மறுபுறம், முன்னாள் ஐ.எஸ்.ஏ. கைதியான அவர், டிஏபி தலைவர்கள் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமல்லாமல் மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
“டிஏபி அனைவரையும் உள்ளடக்கியது – மலாய்க்காரர்கள் உட்பட அனைத்து முக்கிய இனக்குழுக்களின் பிரதிநிதிகளையும் – சபா மற்றும் சரவாக் மக்களையும் கொண்ட ஒரு கட்சி என்பதைக் காண மகாதீர் தவறிவிட்டார்.
“மேலும், மத்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க டிஏபி என்றெம் தவறவில்லை,” என்று அவர் கூறினார்.
நேற்று, லங்காவி நாடாளுமன்ற உறுப்பினரான மகாதீர், தனது முந்தைய ஒத்துழைப்பு அனுபவத்தின் அடிப்படையில் டிஏபியும் சில நேரங்களில் “தீவிரவாத போக்குடன்” செயல்படும் என்று கூறினார்.
அதேபோல் மசீசவும், சில சமயங்களில் தீவிரப் போக்கு காட்டும் என்று மகாதீர் கூறினார்.