குலா : ‘பட்டதாரிகள் நன்றியுடன் இருக்க வேண்டும்’, முஸ்தபாவின் அழைப்பு நியாயமற்றது

பட்டதாரிகளைத் திறமையற்ற அல்லது திறமை குறைந்த வேலைகளை, குறைந்த ஊதியத்திற்குச் செய்ய ஊக்குவிப்பது பொருத்தமானதல்ல, ஏனெனில் இது நீண்ட கால விளைவை ஏற்படுத்தும் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் கூறினார்.

இந்நிலைமையைச் சரிசெய்யாவிட்டால், நாட்டில் வேலையின்மை விகிதம் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

கோவிட் -19 தொற்றின் பிந்தைய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ஊதிய அளவு படிப்படியாக அதிகரித்தாலும், மலேசியாவின் மலிவான உழைப்பைச் சார்ந்திருக்கும் நிலை, அது அதிகரிக்கும் அளவுக்கு அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது என்றார் அவர்.

“இளைஞர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக, அதே குறைந்த ஊதியத்தைச் செலுத்துவதன் மூலம், நாம் அவர்களின் திறனைச் சிறப்பாகப் பயன்படுத்தவில்லை, இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு கொள்கை இயற்றப்பட வேண்டும்.

“நீண்ட காலத்திற்குத் தொடரும் வேலையின்மை, பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும்,” என்று அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் சவால் நிலையை எதிர்கொள்ளும் போது, குறைந்த சம்பளத்துடன் கிடைக்கும் வேலையிலும் பட்டதாரிகள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் முஸ்தபா முகமது கூறிய அறிக்கைக்குக் குலசேகரன் கருத்து தெரிவித்தார்.

பொருளாதாரம் 5.6 விழுக்காடு சுருங்கிவிட்டதால் தொழிலாளர் சந்தைகள் பலவீனமடைந்துள்ளதாக முஸ்தபா கூறினார்.

முன்னாள் அமைச்சரான குலசேகரன், முஸ்தபாவின் அறிக்கை மிகவும் பொறுப்பற்றது என்று தான் நினைப்பதாகக் கூறினார்.

“பட்டதாரிகளுக்குக் குறைந்த சம்பளம் கிடைக்காமல் பார்த்துக் கொள்வது அவருடைய வேலை,” என்று டிஏபி உதவித் தலைவரான அவர் தெரிவித்தார்.

கொள்கை மட்டத்தில், இளைஞர்களின் வேலையின்மைக்குத் தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களை உள்ளடக்கிய இரு தரப்புக் குழுவை அமைக்குமாறு குலசேகரன் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட கொள்கைகளுக்கான விவாதங்களை நடத்தும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, கோவிட் -19 காரணமாக, கடந்த ஆண்டு பட்டதாரிகளின் சம்பளம் வழக்கத்தை விடக் குறைவாக இருந்ததாகவும், ஆனால் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் இது மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் முஸ்தபா கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், முன்னர் 57 மாநகர மற்றும் நகராட்சி மன்றங்களின் கீழ் உள்ள முக்கிய நகரங்களில் குறைந்தபட்ச மாத ஊதியத்தை RM1,200 ஆக உயர்த்தியிருந்தது, அதே நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம் நாடு முழுவதும் உள்ள பிற வட்டாரங்களில் ஒரு மாதத்திற்கு RM1,100 ஆக இருந்தது.