புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை (புலனாய்வு மற்றும் செயல்பாடு) துணை இயக்குநர் டி.சி.பி. ஜைனுடின் அகமது, அந்த 59 வயதுடைய ‘டத்தோ’ ஒரு தொழிலதிபர் என்றார்.
கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை (ஏப்ரல் 7 மற்றும் 8) சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் சிண்டிகேட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு மாநிலங்களில், ஆறு தனித்தனியான சோதனைகளில் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது நபர்களில் ‘டத்தோ மற்றும் டத்தின்’ பதவியில் இருப்போரும் அடங்குவர்.
12.24 கிலோ ஷாபு, 6.61 கிலோ எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் 420 கிராம் கெத்தாமின் மற்றும் மூன்று சொகுசு வாகனங்கள் மற்றும் நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர், இவை அனைத்தும் RM1.39 மில்லியன் மதிப்புடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
“புக்கிட் அமான், சிலாங்கூர் மற்றும் ஜொகூர் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை நடவடிக்கைகளின் விளைவாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, 2020 செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக இருப்பதாக நம்பப்படுகிறது,” என்று அவர், இன்று பத்து பஹாட் மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தோனேசியச் சந்தையிலிருந்து மருந்துகளை வெளியே கொண்டு வர, பத்து பஹாட் உட்பட ஜொகூரின் மேற்கு கடற்கரையைச் சுற்றியுள்ள நீர் பரப்பை இந்த சிண்டிகேட் பயன்படுத்தியது என்றும் அவர் நம்பினார்.
கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில், ஒருவர் போதைப்பொருளுக்குச் சாதகமாக சோதனை முடிவுகள் வந்துள்ளன, அவர்களில் ஐந்து பேருக்கு முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றவியல் பதிவு இருந்தது, அதில் போதைப்பொருளில் சம்பந்தப்பட்டதற்காக ஐந்து வருடங்கள் அந்த ‘டத்தோ’வும் சிறையில் இருந்துள்ளார்.
ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952-இன் பிரிவு 39B-இன் கீழ், இந்த வழக்கை விசாரிப்பதற்காக 22 முதல் 59 வயதுக்குட்பட்ட அனைத்து உள்ளூர் சந்தேக நபர்களும் அடுத்த புதன்கிழமை வரை ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, கடந்த மாதம் தைவான் அதிகாரிகள் கைது செய்தவர்களுக்கும் இந்த சிண்டிகேட்டிற்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாக ஜைனுடின் கூறினார்.
“தைவானியக் கடலில், மூன்று மலேசியர்களும் நான்கு இந்தோனேசியர்களும் கைது செய்யப்பட்டனர், 281 கிலோ எடையுள்ள கெத்தமின் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன, இது RM15 மில்லியன் மதிப்புடையது,” என்று அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, தைவான் அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர், விசாரணையில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் மலேசியாவில் இந்தக் குழுவுடன் தொடர்பு வைத்திருப்பதை ஒப்புக்கொண்டது கண்டறியப்பட்டது.
“போதைப்பொருள் கடத்தலுக்குக் கடலைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் இடைத்தரகர்கள் என்று நம்பப்படும் இந்தக் குழுவில் மீதமுள்ள உறுப்பினர்களைப் போலிசார் இப்போது தீவிரமாகத் தேடுகின்றனர்,” என்று அவர் கூறினார்.
– பெர்னாமா