பி.என்., எம்.என்.-உடன் விவாதமின்றி, ஜொகூர் தேசிய முன்னணி இடங்கள் விநியோகம் – ஹஸ்னி

15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ 15) எதிர்கொள்வதில், கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் இடங்களைப் பிரிப்பது குறித்து விவாதங்களைத் தேசிய முன்னணி தொடங்கியுள்ளது.

அம்னோ, மசீச மற்றும் ம.இ.கா. ஆகியவையுடன், தேர்தலில் போட்டியிட ஜொகூர் தேசிய முன்னணி ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளதாக அதன் தலைவர் ஹஸ்னி முகமது தெரிவித்தார்.

“நான் மசீச மற்றும் ம.இ.கா. தலைவர்களுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கிவிட்டேன்,” என்று அந்த அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் இன்று ஜொகூர் பாருவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், இந்த விவாதங்கள் இன்னும் தொகுதிகளையும் கட்சிகளுக்கான மொத்த இடங்கள் விநியோகத்தையும் உறுதி செய்யவில்லை என்று ஜொகூர் மந்திரி பெசாரான ஹஸ்னி கூறினார்.

இடங்கள் விநியோகிப்பது தொடர்பான கலந்துரையாடல், ஜொகூர் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் மட்டுமே என்றும், தேசியக் கூட்டணி (பிஎன்) அல்லது முவாஃபாக்கட் நேஷனல் (எம்என்) ஆகியவற்றின் பங்காளர்களை ஈடுபடுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா