முன்னாள் ஷரியா நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் பாஸ் தலைவர்களும் பி.கே.ஆரில் இணைகிறார்

முன்னாள் ஷரியா நீதிமன்ற நீதிபதி மற்றும் முன்னாள் பாஸ் தலைவர்கள் உட்பட 15 பேர் பி.கே.ஆரில் இணைவதாக அதன் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

முன்னாள் ஷரியா உயர்நீதிமன்ற நீதிபதி பஹாரும் ஹஸ்புல்லா, முன்னாள் டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் ரசாலி ஹசான், முன்னாள் நெகிரி செம்பிலான் பாஸ் இளைஞர் தலைவர் நோர் அஸ்மான் முகமது மற்றும் முன்னாள் சிரம்பான் பாஸ் உலமா செயற்குழு உறுப்பினர் மொஹமட் ரைஸ் முஸ்தபா கமல் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

அவர்களுடன் சமய போதகர்கள், முன்னாள் மத ஆசிரியர்கள், முன்னாள் இமாம்கள் மற்றும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் படையின் (அபிம்) தலைவர்களும் சேர்ந்து கொண்டனர்.

அவர்களின் பங்கேற்பை நெகிரி செம்பிலானில், செய்தியாளர் சந்திப்பில் அன்வர் அறிவித்தார்.

அவர்களின் பங்கேற்பு மேலும் பல போதகர்களையும் மத ஆசிரியர்களையும் பி.கே.ஆரில் சேர ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன் என்று அன்வர் கூறினார்.

‘இஸ்லாமிய இயக்கத்தால் ஆதரிக்கப்படும் பி.கே.ஆர்’

இதற்கிடையில், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுதீன் ஹருன், இஸ்லாமிய இயக்கங்களின் ஆதரவு பி.கே.ஆருக்கு இருப்பதை அவர்களின் பங்கேற்பு நிரூபித்தது என்றார்.

“உண்மையில், எங்களுக்கு (பி.கே.ஆர்) ஆரம்பத்தில் இருந்தே நமக்குத் தெரிந்த இஸ்லாமிய இயக்கங்களின் ஆதரவு உண்டு. இன்று அதனை இந்த நண்பர்களின் ஆதரவு நிரூபித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

பி.கே.ஆர். தாராளமயம், பன்மைத்துவம் மற்றும் பலவற்றை ஆதரிக்கும் ஒரு கட்சி என்ற அவதூற்றை இது நீக்கியுள்ளது.

“மலாய், முஸ்லீம் சமூகம் மட்டுமல்ல, சீனர், இந்தியர் மற்றும் நாட்டின் பல்வேறு இனங்களைப் பற்றியும் சிந்தியுங்கள்,” என்று அவர் கூறினார்.