முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) 2.0 அமல்படுத்தப்பட்ட மூன்று மாதங்களும் அவசரகாலப் பிரகடனமும் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக விவரித்தார்.
நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் இந்த இரண்டு நடவடிக்கைகளின் அமலாக்கம் பயனுள்ளதா அல்லது இல்லையா என்று நஜிப் கேள்வி எழுப்பினார்.
சுகாதார அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட கோவிட் -19 புள்ளிவிவரங்களையும் நஜிப் பதிவேற்றியுள்ளார்
“இது பயனுள்ளதா? கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதில் அவசரகால நடைமுறை வெற்றி பெற்றதா?
“உண்மையில், கோவிட் -19 அல்லது ரோ/ஆர்.டி. தொற்று வீதமும் நேற்று மேலும் 1.09 ஆக (நடுநிலை மட்டமான 1.00-க்கு மேல்) உயர்ந்தது – இது புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மேல்நோக்கி செல்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.
“இது கோவிட் பரவுவதைத் தடுப்பதில் அவசரகால நடைமுறை வெற்றிபெறவில்லை என்பதைத் தெளிவாக நிரூபிப்பதுடன், மே மாதத்தில் இரட்டை இலக்கங்களாகக் குறைக்கப்பட்ட நேர்வுகளின் எண்ணிக்கைக்கான அவசர இலக்கு + பி.கே.பி. 2.0-ஐ அடைவதற்கான நம்பிக்கைகள் மறைந்து கொண்டிருக்கின்றன,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, தினசரி கோவிட் -19 நேர்வுகளைக் கட்டுப்படுத்த முடியுமானால், ஆகஸ்ட் 1 வரை அல்லது அதற்கு முன்னதாக அமல்படுத்தப்பட வேண்டிய அவசரகாலப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் என்றும் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாது என்றும், ஆனால் நீதித்துறை, சிவில் அரசு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார்.
13 ஜனவரி 2021 புதன்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி 26 ஜனவரி 2021 வரை 14 நாட்களுக்குப் பி.கே.பி 2.0. அமல்படுத்தப்பட்டது.
இந்த உத்தரவு மூன்று நிலைகளை உள்ளடக்கியது, அதாவது ஆறு மாநிலங்களில் பி.கே.பி., அதாவது பினாங்கு, சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசங்கள் (கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான்), மலாக்கா, ஜொகூர் மற்றும் சபா.
இதற்கிடையில், நோன்புப் பெருநாளின் போது மாநிலத்தைக் கடக்க அனுமதி வழங்கப்படாது என்ற எண்ணத்தை இந்நிலைமை தெளிவாகக் காட்டுவதாக அந்தப் பெக்கான் எம்.பி. கூறினார்.
“தேசியக் கூட்டணி அரசாங்கம், பி.கே.பி 2.0-இன் தொடக்கத்தில், ஒரு குறுகிய ஆனால் மிகவும் கண்டிப்பான பி.கே.பியைச் செயல்படுத்த பிடிவாதமாக இருந்தபோதிலும், தொழிற்சாலைகள், பேரங்காடிகள், விக்டோரியா சீக்கிரெட், நகைக் கடைகள் மற்றும் பலவற்றிற்கு நெகிழ்வு கொடுத்தது ஒரு பெரிய தவறாகிப் போனது.
“இதன் விளைவாக, நோன்புப் பெருநாளுக்கு மாநிலங்களைக் கடக்கும் அனுமதி ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது,” என்று நஜிப் கூறினார்