கடந்தாண்டு பிப்ரவரியில், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்தில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது ஈடுபட்டுள்ளதாகப் பினாங்கு துணை முதல்வர் II பி இராமசாமி கூறினார்.
பி.எச். அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மகாதீர் பிரதமர் பதவி விலகியதே முக்கியக் காரணம் என்று அந்த டிஏபி தலைவர் கூறினார்.
“மகாதீர் அதை ஒரு நோக்கத்துடன் செய்தார். பிரதமர் பதவியை அன்வருக்கு வழங்கக்கூடாது என்றத் திட்டம் மகாதீருக்கு உள்ளது.
“நெருக்கடியின் போது, மகாதீர் பதவியை இராஜினாமா செய்யாமல் அன்வருக்கு வழிவிட்டிருந்தால், பி.எச். இன்று அரசாங்கமாகவே இருக்கும்,” என்று வணக்கம் மலேசியா செய்தித்தளம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
2020 பிப்ரவரி மாதம், 22 மாத நிர்வாகத்திற்குப் பிறகு, பி.எச். அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது, அதற்குப் பதிலாக முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி நியமிக்கப்பட்டது; நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து அந்தப் பிறை சட்டமன்ற உறுப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது.
பிரதமர் அதிகாரப் பரிமாற்றம் தொடர்பான பிரச்சினை, முன்னர் பி.எச்.-இல் ஒரு வெளிப்படையான மோதலைத் தூண்டியது, இது அன்வார் ஆதரவாளர்களுக்கும், அப்போது பெர்சத்து தலைவராக இருந்த மகாதீருக்கும் இடையே ஒரு பரஸ்பர சம்பவத்திற்கு வழிவகுத்தது.
அன்வரின் ஆதரவாளர்கள் மாற்றத்தை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று விரும்பினார்கள், மேலும் மாற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை வழங்குமாறு மகாதீருக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இருப்பினும், மகாதீர் ஆதரவாளர்கள் சிலர் மகாதீர் தனது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் தொடர வேண்டும் என்று விரும்பினார்கள்.
இறுதியாக, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக, அம்னோ மற்றும் பாஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்து, பெர்சத்து பி.எச்.-லிருந்து விலகியதால், மகாதீர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார், அதனைத் தொடர்ந்து பி.எச். அரசாங்கம் வீழ்ந்தது.
இதற்கிடையில், பி.எச். வீழ்ச்சிக்கு அன்வர்தான் காரணம் எனும் கூற்றை இராமசாமி நிராகரித்தார்.
“அஸ்மின் (அலி) பி.கே.ஆரை விட்டு வெளியேறியது, முஹைதீன் மகாதீரை முதுகில் குத்தியது போன்ற பிற காரணங்களும் உள்ளன.
“மற்றவர்கள் இதைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்கத் துணியவில்லை. ஆனால், பி.எச்.-இன் வீழ்ச்சிக்கு மகாதீர்தான் முக்கியக் காரணம் என்று என்னால் சொல்ல முடியும்.
“மற்றவர்கள் அல்ல, அன்வர் அல்ல, குவான் எங் அல்லது மாட் சாபு அல்ல, மகாதீர்தான் காரணம்.
“அவரை நம்பி நாங்கள் ஏமாந்தோம், மகாதீர் எங்களுக்குத் துரோகம் இழைத்தார்,” என்று அவர் கூறினார்.