ஸெட்டி கணவரிடம், போலீசார் 3 மணி நேரம் விசாரணை

முன்னாள் தேசிய வங்கியின் ஆளுநர், ஸெட்டி அக்தர் அஸிஸ்-இன் கணவர் தவ்ஃபிக் அமானை, இன்று காலை போலீசார் விசாரித்ததாக செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரங்களை மேற்கோள் காட்டி, மத்தியக் காவல்துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையால் (ஜெ.எஸ்.ஜெ.கே.) மூன்று மணி நேரம் தவ்ஃபிக்கின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி ஏட்ஜ் மார்கெட்ஸ்.கோம் (Theedgemarkets.com) அறிக்கை கூறியுள்ளது.

அவரது வாக்குமூலத்தை 1எம்.டி.பி. விசாரணை அதிகாரி ஃபூ வெய் மின் பதிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

அவரது வழக்கறிஞர் ஜக்ஜித் சிங்குடன் வந்த தவ்ஃபிக், 1எம்.டி.பி. நிதி, அவரும் அவரது மகனும் நிர்வகிக்கும், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு உதவ, அவர் அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடந்த மாதம், புக்கிட் அமான் ஜெ.எஸ்.ஜெ.கே. இயக்குநர் ஜைனுதீன் யாக்கோப், பணமதிப்பிழப்பு தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கை சட்டம் 2001 (சட்டம் 613) (‘அம்லா’) கீழ் அந்த வழக்கு விசாரணை நடைபெறுவதாகக் கூறியிருந்தார்.

சிங்கப்பூர் நிறுவனமான அயர்ன் ராப்சோடி லிமிடெட் -க்கு, மொத்தம் 16.22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அனுப்பப்பட்டதாக தி எட்ஜ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து, சிங்கப்பூர் போலீசார் 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில், தேசிய வங்கிக்கு அறிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸெட்டி அப்போது தேசிய வங்கியின் ஆளுநராக இருந்தார்.

1எம்.டி.பி. ஊழலின் சூத்திரதாரி என்று கருதப்படும் ஜோ லோவின் நிறுவனம் / வங்கிக் கணக்கிலிருந்து 16.22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, இப்போது பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்டின் தலைவராக இருக்கும் ஜெட்டிக்கு, இந்தப் பரிவர்த்தனை குறித்து தெரியுமா என ஊழல் மற்றும் பினாமிகளுக்கு எதிரான போர் மையம் (சி4) (The Center for Combat Corruption and Cronyism), கேள்வி எழுப்பியது.

பி.எச். நிர்வாகத்தின் போது, அரசாங்க ஆலோசனைக் குழுவில் அவரை நியமித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிருக்கு இந்த விஷயம் தெரியுமா என்றும் சி4 கேள்வி எழுப்பியுள்ளது.