ஒரு மாணவிக்கு எதிரான பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் குறித்து, காவற்படை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்த கருத்து அடிப்படையிலான கட்டுரை தொடர்பில் விசாரிக்க உள்துறை அமைச்சு (கே.டி.என்) மலேசியாகினி-யையும் சைனா பிரஸ்-ஐயும் அழைக்கும்.
உள்துறை அமைச்சின் கூற்றுப்படி, அந்தச் செய்தி அறிக்கை தவறானது.
“இதுதொடர்பாக, உள்துறை அமைச்சு, மலேசியாகினி-யையும் சைனா பிரஸ்-ஐயும் உடனடியாக அழைத்து, அந்த ஊடக அறிக்கைகள் பற்றிய தெளிவு மற்றும் கூடுதல் தகவல்களைப் பெறும்,” என்று அமைச்சு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சந்திப்பின் தேதி கொடுக்கப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அயின் ஹுஸ்னிசா சைஃபுல் நிஸாம், 17, தனது வகுப்பு தோழர்களிடமிருந்து பாலியல் பலாத்கார அச்சுறுத்தல்களைப் பெற்றதாகக் கூறினார்.
அதைத் தொடர்ந்து, அந்த மாணவரின் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் போலீஸ் புகார் ஒன்றைப் பதிவு செய்தார்.
முன்னதாக, அயின் மற்றும் அவரது தந்தையும், ஆசிரியரின் கருத்து குறித்து ஒரு புகாரைச் செய்திருந்தனர்.
நேற்று, அயின் வழக்கு குறித்து கேட்டபோது, ஷா ஆலாமில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அக்ரில் பின்வருமாறு கூறினார் :
“மாணவர் (அயின்) இரண்டு போலிஸ் புகார்களைப் பதிவு செய்திருக்கிறார், அதில் முதலாவது, ஆசிரியரின் அணுகுமுறை சரியானது அல்ல (பொருத்தமானது) என்று அவர் உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.
“நேற்று, அவர் தனது வகுப்பு சக மாணவனிடமிருந்து பெற்ற அச்சுறுத்தல் குறித்து கூடுதல் புகார் அளித்தார், அது நகைச்சுவையாக இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கலாம், ஆனால் அவரால் (அயின்) அதை ஏற்றுகொள்ள முடியாமல் இருந்திருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
இது தொடர்பில், போலிசார் விசாரணை ஆவணங்களைத் திறந்து, அயினின் ஆசிரியர் மற்றும் அவரது வகுப்பு தோழனிடமிருந்து வாக்குமூலங்களை எடுத்துள்ளதாகவும் அக்ரில் கூறினார்.
முகநூலில், செய்தியாளர் சந்திப்பின் வீடியோ பதிவின் அடிப்படையில், “துணை ஐ.ஜி.பி. இளையர் மீதான பாலியல் வல்லுறவு அச்சுறுத்தலை ‘ஒரு நகைச்சுவையாக இருக்கலாம்’ என்று விவரிக்கிறார்” (“Deputy IGP describes rape threat against teen as ‘maybe a joke’ ) என்றத் தலைப்புடன் மலேசியாகினி ஒரு கட்டுரையை வெளியிட்டது.
இதற்கிடையில், சைனா பிரஸ் சீன மொழியில், “மாணவிக்குப் பாலியல் அச்சுறுத்தல், அக்ரில் சானி : வகுப்பு தோழர்கள் நகைச்சுவையாக பேசி இருக்கலாம்” என்றத் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
அயினின் அறிக்கையை மலேசியாகினி பார்த்துள்ளது, அதில் அவர் அச்சுறுத்தல் குறித்து கவலை தெரிவித்தார், அதில் நகைச்சுவையாக இருப்பதற்கான வாய்ப்பு ஏதும் குறிப்பிடவில்லை.
புக்கிட் அமான், அந்தக் கட்டுரைக்குப் பதிலளிக்கும் விதமாக, “ஒருவேளை அது ஒரு நகைச்சுவை” என அக்ரில் உண்மையில் உச்சரித்ததைக் காட்டும் ஓர் எழுத்துப்படியைச் சமர்ப்பித்தது.
ஆயினும், அந்த அறிக்கையில் ‘ஒரு நகைச்சுவை’ என்பது விசாரிக்கப்பட்டு வரும் ஓர் அம்சம் என்றும், இந்தப் பிரச்சினை வெறும் நகைச்சுவையானது என்று அர்த்தமல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் அந்தக் கட்டுரையில், அச்சுறுத்தல் “வெறும் நகைச்சுவையானது” என்று அக்ரில் கூறியது போன்றத் தோற்றத்தை அளித்துள்ளது என்று புக்கிட் அமான் கூறியுள்ளது.
மலேசியாகினி அத்தகைய வாக்கியத்தை எழுதவில்லை.
பதிவுக்காக, “மாணவர் பாலியல் வல்லுறவு நகைச்சுவை” – இரண்டு புகார்களைப் போலிசார் பெற்றுள்ளனர்” என்றத் தலைப்பில், பெர்னாமா நேற்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.