ஐ.ஜி.பி. புகார் : அமைச்சர்கள்கூட காவல்துறையை விமர்சிக்கிறார்கள்

சாலை தடைகளைச் (எஸ்.ஜே.ஆர்.) செயல்படுத்துவதிலான அதிருப்தி விமர்சனங்களைப் பொதுமக்களிடமிருந்து மட்டுமல்லாமல், ‘அரசாங்கத் தரப்பினர்’-இடமிருந்தும் அரச மலேசியக் காவல்துறை (பி.டி.ஆர்.எம்.) எதிர்கொள்கிறது என்று காவற்படை தலைவர் அப்துல் ஹமீட் படோர் தெரிவித்தார்.

இது தொர்பில், தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அப்துல் ஹமீத், கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க, தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற எஸ்.ஜே.ஆரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டியவர்களிடமிருந்து இந்த விமர்சனம் வந்துள்ளது என்றார்.

“அரசாங்க அதிகாரிகளும் சில “அமைச்சர்கள்”கூட அதில் இருந்தனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“எனக்கு வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், கூட்டத்தில், ‘பி.டி.ஆர்.எம். ஏன் புத்ராஜெயாவில் சாலைத் தடைகளை அமைத்தது’ என்று கேள்வி எழுப்பப்பட்டது’. சாலைத் தடைகளை அமைப்பதில் புத்ராஜெயாவுக்கு என்ன தொடர்பு?

“எம்.கே.என்.-இன் அறிவுறுத்தலின் பேரில், சாலை தடைகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டியவர்களிடமிருந்து இந்த விமர்சனம் வந்தது.

நோன்புப் பெருநாள் விடுமுறையின்போது, கிராமங்களுக்குத் திரும்ப மக்கள் திருட்டுத்தனமாக மாநில எல்லைகளைக் கடக்க நேரிடும், அதனைத் தடுக்க நெடுஞ்சாலை டோல் சாவடிகளில் காவல்துறையின் திட்டங்கள் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டது

காவல்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளின் விடுப்பும் முடக்கப்படலாம் என்று அப்துல் ஹமீட் கூறினார். கடந்த ஆண்டு முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி.) அமல்படுத்தியதைப் போல, தற்போது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறைக்குப் போதுமான பலம் இருக்கிறது என்று நம்புவதாக அவர் சொன்னார்.

மேலும், தற்போதைய நிலவரப்படி கோவிட் -19 நேர்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தினசரி நேர்வுகள் இன்னும் அதிக அளவில் உள்ளன.

ஒரு காலகட்டத்திற்கு, 46,000 பணியாளர்களையும் மேலும் 12,000 மாற்றுஆளுடன் (standby) அணிதிரட்ட முடியும், அந்த எண்ணிக்கையில் இராணுவம், மலேசியத் தன்னார்வத் துறை (ரேலா) மற்றும் மலேசிய சிவில் பாதுகாப்பு (ஏ.பி.எம்.) போன்ற பிற நிறுவனங்களின் பலத்தை இன்னும் சேர்க்கவில்லை என்று அப்துல் ஹமீட் கூறினார்.

“பி.கே.பி. அறிவிக்கப்படாவிட்டாலும், பி.கே.பி. செயல்படுத்தப்படுவது போல, இறுக்கமான நடவடிக்கையை (அமலாக்கத்தை) நாங்கள் செயல்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

எனவே, பண்டிகை காலங்களில் எஸ்.ஜே.ஆரை அமல்படுத்தும் காவல்துறையை, கிலோமீட்டர் தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர் என்று விமர்சிக்க வேண்டாம் என்று அப்துல் ஹமீத் பொதுமக்களை எச்சரித்தார்.

“புரியாத, புத்திசாலி இல்லாத அரசு அதிகாரிகள் யாராவது இருந்தீர்கள் என்றால், வந்து என்னைப் பாருங்கள். நாங்கள் ஏன் அதை செய்கிறோம் என்பதை அவர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறேன். புத்திசாலித்தனமாக விமர்சனமும் புகாரையும் மட்டும் செய்யாதீர்கள்.

“இது மக்களிடமிருந்து வந்தால் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அது அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து வந்தால், அமைச்சரே …

“நான் உங்கள் அனைவரையும் நிலைமையைப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் மக்களைப் பாதுகாக்க விரும்புகிறோம், பின்னர் எங்களை (போலிஸ்) குறை சொல்லாதீர்கள்,” என்று அவர் கூறினார்.