ஆரம்பப்பள்ளி மதிப்பீட்டுச் சோதனை (யுபிஎஸ்ஆர்), இந்த ஆண்டு முதல் முற்றிலுமாக நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
இந்த ஆண்டிற்கான படிவம் மூன்று மதிப்பீடு (பி.டி.3) இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் ராட்ஸி தெரிவித்தார்.
இன்று ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விஷயத்தை அறிவித்தார்.
“யுபிஎஸ்ஆரை நீக்குவதற்கு இணங்க, கற்றல் சிரமங்களைக் கொண்ட சிறப்புத் தேவைகள் மாணவர்களுக்கானத் தொடக்கப்பள்ளி மாற்று மதிப்பீடும் (பிஏஎஸ்ஆர்) நீக்கம் செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
யு.பி.எஸ்.ஆரை நீக்குவதன் மூலம், 6-ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு முறை, இந்த ஆண்டு தொடங்கி பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டை (பி.பி.எஸ்.) வலுப்படுத்துவதோடு, 2022-ஆம் ஆண்டு உறைவிடப் பள்ளிகளில் சேருவது ‘சிறப்பு பள்ளி சேர்க்கை மதிப்பீட்’டின் (பி.கே.எஸ்.கே) அடிப்படையில் இருக்கும் என்றார் அவர்.
யுபிஎஸ்ஆரை இரத்து செய்வதற்கான முடிவு, பல்வேறு செயல்முறைகள் உட்பட, நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு அமர்வுகளில் பங்கேற்ற 1,700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சங்கங்களின் பங்கேற்பாளர்களின் உள்ளீடுகளைப் பெற்ற பின்னர் எடுக்கப்பட்டது என ராட்ஸி மேலும் விரிவாக கூறினார்.
யுபிஎஸ்ஆர் தேர்வை மேற்கொள்ள ஏதுவாகப், பாடத்திட்டங்களை விரைவில் முடிக்க முயற்சிப்பதில் கவனம் செலுத்த பள்ளியில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என ஆசிரியர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டது என்றார் ராட்ஸி.
உண்மையில், யுபிஎஸ்ஆருக்கு மாணவர்களைத் தயார்படுத்த, தேர்வுகள் இல்லாத பிற பாடங்களின் நேரத்தை எவ்வாறு ‘திருட வேண்டி’ வரும் என்று சில ஆசிரியர்கள் விவரித்ததாகவும் அவர் சொன்னார். இதனால், ஆசிரியர்கள் தங்களின் படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான இடம் குறைக்கப்படுகிறது அல்லது இல்லாமல் போகிறது.
ஒரு முக்கியமான தேர்வாகக் கருதப்பட்ட யு.பி.எஸ்.ஆருக்கு அதிகக் கவனம் செலுத்தப்பட்டதால், தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியின் பிற அம்சங்கள் மட்டுப்படுத்தப்பட்டதைச் சில பெற்றோர் பகிர்ந்து கொண்டனர், ஏனெனில் சிலர் இந்தத் தேர்வுக்காக, தங்கள் பிள்ளைகளை முதலாம் ஆண்டிலிருந்தே கூடுதல் வகுப்புகளுக்கு அனுப்பியுள்ளனர்.
உறைவிடப் பள்ளிகளில் இடம் கிடைக்க இந்த யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முக்கியமான ஒன்று என மாணவர்கள் கூறியதாக ராட்ஸி குறிப்பிட்டார். ஆனால், கடந்தாண்டு பி.கே.எஸ்.கே. அமல்படுத்தப்பட்டபோது நான்கில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முற்பட்டனர் என்றார் அவர்.
“எனவே, மாணவர்களுக்கு ஒரு தேர்வு வழங்கப்பட்டால், யூ.பி.எஸ்.ஆரில் அமரும் அனைத்து மாணவர்களும் உறைவிடப் பள்ளிகளுக்குச் செல்ல விரும்பவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம்,” என்ற அவர், பள்ளி நேரத்திற்குப் பிறகு மாணவர்கள் பல்வேறு வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டிய அழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர் என்றார்.
யுபிஎஸ்ஆர் முதன்முதலில் 1988-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த நேரத்தில் அடிப்படை நோக்கம் ‘4எம்’ ஆகும், இது வாசித்தல், எழுதுதல், எண்ணுதல் மற்றும் பகுத்தறிவு.
கோவிட் -19 தொற்று பரவலைத் தொடர்ந்து, பள்ளியில் மாணவர்கள் நேருக்கு நேர் கற்றல், கற்பித்தலுக்கான நேரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டபின், இந்த ஆண்டு பிடி3 தேர்வு இரத்து செய்யப்படுகிறது என்று அவர் விளக்கினார்.
இது சம்பந்தமாக, இந்த ஆண்டு தேர்வுக்கான மதிப்பீட்டு முறை, கடந்தாண்டைப் போல பிபிஎஸ் முறையில் நடைபெறும், இதில் வகுப்பறை மதிப்பீடு (பிபிடி), உடல் செயல்பாடு மதிப்பீடு, விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்டம் (பிஏஜேஎஸ்கே) மற்றும் உளவியல் வேதியியல் மதிப்பீடு (பிபிஎஸ்ஐ) ஆகியவையும் சேர்க்கப்படும்.
“இந்த ஆண்டு பிடி3 இரத்து செய்யப்படுகிறது, ஆனால் இந்த மதிப்பீடு தேசிய மதிப்பீட்டு முறையில் இருக்கும், இது யுபிஎஸ்ஆரிடமிருந்து வேறுபட்டது, இது 2021 முதல் முற்றிலுமாக இரத்து செய்யப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
-பெர்னாமா