மாணவர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மத்தியில், கோவிட் -19 பரவுவதால் சிலாங்கூரில் 30 பள்ளிகளும், நெகிரி செம்பிலானில் 13 பள்ளிகளும் இரண்டு நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டன.
சிலாங்கூர் மாநிலச் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷா’ரி நகாடிமான், துப்புரவுப் பணிகளைச் செய்வதற்கும், மாணவர்களுக்குத் திரையிடப்படுவதற்கும் இந்த 2 நாள்கள் வாய்ப்பளிக்கும் என்றார்.
“இதுவரை, இந்தப் பள்ளிகளில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை கடுமையான அறிகுறிகளைக் காட்டவில்லை, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அவர் நேற்று பண்டாமாரான் விளையாட்டு அரங்கில் கோவிட் -19 இரண்டாம் கட்டத் தடுப்பூசியைக் கண்காணிக்க வந்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.
மாவட்டச் சுகாதார அலுவலகம் (பி.கே.டி.) மாவட்டக் கல்வி அலுவலகத்தைத் (பிபிடி) தொடர்புகொண்டு, ஆபத்துள்ளப் பள்ளிகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகளை மூடுவதற்கான அதிகாரம் குறித்து விவாதிப்பதாகவும் டாக்டர் ஷா’ரி கூறினார்.
நெகிரி செம்பிலானில் இன்றும் நாளையும் 12 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சிரம்பானில் உள்ள சீனோ ஆங்கிலச் சீனப்பள்ளி நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் முதலீடு, தொழில், தொழில்முனைவோர், கல்வி மற்றும் மனித மூலதனத்திற்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் மொஹமட் ராஃபி கூறினார்.
இதற்கிடையில், சிரம்பான் 2 இடைநிலைப்பள்ளி, நீலாய் தமிழ்ப்பள்ளி, டேசா செம்பாக்கா மற்றும் போர்ட்டிக்சன் தேசியப் பள்ளிகள் ஆகிய நான்கு பள்ளிகளின் மூடலும் இவ்வாரம் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பெர்னாமா