மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், மே 1 ஒன்றுகூடலில் கலந்துகொண்டது மற்றும் சமூக ஆர்வலர் ஃபாஹ்மி ரேஸாவுக்கு ஆதரவாக ஒன்றுகூடியது தொடர்பான பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்க, டாங் வாங்கி மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார்.
தொடர்பு கொண்டபோது, தான் கலந்துகொண்ட இரண்டு பேரணிகள் தொடர்பாக விளக்கமளிக்க காவல்துறையினர் தன்னைத் தொடர்பு கொண்டதை, அருள் உறுதிப்படுத்தினார்.
“மே 1 பேரணி தொடர்பில், நேற்று எனக்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது.
“நானும் இன்னும் நான்கு பங்கேற்பாளர்களும், அடுத்தத் திங்கட்கிழமை காவல்நிலையத்திற்கு வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
அருளைத் தவிர, பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் ஏ சிவராஜன், பிஎஸ்எம் உறுப்பினர்களான நிக் அஜீஸ் அஃபிக், இ நளினி மற்றும் மலாயாப் பல்கலைக்கழக இளைஞர் அமைப்பின் (உமானி) முன்னாள் தலைவர் வோங் யான் கே ஆகியோரும் விளக்கமளிக்க அழைக்கப்பட்டனர்.
மே 1 பேரணி, 90-ம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து, தொழிலாளர் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து பிஎஸ்எம் ஏற்பாடு செய்துவரும் வருடாந்திர நிகழ்ச்சியாகும்.
இதற்கிடையில், ஏப்ரல் 24-ம் தேதி, ஃபாஹ்மி ரெஸாவுக்கான ஆதரவு பேரணியில் கலந்து கொண்டதற்கான விளக்கங்களைப் பெற, மற்றொரு பிஎஸ்எம் உறுப்பினருடன் காவல்நிலையம் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அருள் கூறினார்.
“சிவரஞ்சினிக்கும் எனக்கும் ஓர் அழைப்பு அறிவிப்பு வந்துள்ளது, நாளை காலை 11 மணிக்கு, காவல் நிலையத்திற்கு வரவேண்டுமென அதில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், நான் அதைப் பிற்பகல் 2 மணிக்கு அல்லது அடுத்தத் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க முயற்சிப்பேன்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஃபாஹ்மிக்கான ஆதரவு பேரணியில் கலந்து கொண்டதற்காகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 111-ன் (சட்டம் 593) கீழ், வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளுமாறு அருள் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
முன்னதாக, ஃபாஹ்மி தயாரித்த ஸ்பாட்ஃபி (Spotify) ‘பிளேலிஸ்ட்’-இல், பேரரசியார் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா படம் இருந்தது தொடர்பில், ஃபாஹ்மி காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார்.
பின்னர் அவர், ஓரிரவு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.