கடந்த ஆண்டு தடுப்புக் காவலில் எட்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) தெரிவித்துள்ளது.
2020, ஏப்ரல் 5-ஆம் தேதி, பஹாங், பெந்தோங் காவல் நிலையத்தில் ஜி ஜெஸ்டஸ் கெவின் என்ற நபர் இறந்து போனார், அதுவே கடந்தாண்டு சுவாராம் பதிவு செய்த முதல் மரண வழக்கு ஆகும்.
ஆவணப்படுத்தப்பட்ட பிற இறப்புகள் :-
- மே 31 – கோலாலம்பூர், ஜின்ஜாங் காவல் நிலையத்தில் தான் பஹதூர்
- 12 ஜூன் – சிலாங்கூர், மேப்ஸ் தனிமைப்படுத்துதல் மையத்தில் ஸீவ்தீன் காதர் மஸ்தார், குடிநுழைவுத் துறையினரின் காவலில் இருந்தபோது.
- ஜூலை 2 – சிலாங்கூர், சுங்கை பூலோ சிறையில் வி முகிலரசு
- ஜூலை 17 – பினாங்கு, ஜார்ஜ்டவுன் நீதிமன்ற வளாகத்தில் வோங் கோக் லியோங்
- ஜூலை 2, செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 13 ஆகியத் தேதிகளில் பெயரிடப்படாத நபர்கள் சம்பந்தப்பட்ட மற்ற மூன்று வழக்குகள்.
சுவாராமின் கூற்றுப்படி, வோங்கின் மரணம் தற்செயலானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற இறப்புகள் “மருத்துவம்” அல்லது “அறிக்கையிடப்படாதவை” என்று பெயரிடப்பட்டன. ஆக, ஜூலை 17 வழக்கு தவிர, மற்ற இறப்புகளுக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
“2020-ஆம் ஆண்டில், நீதிக்கான அணுகல் எந்தவிதமான அதிகரிப்பையும் காட்டவில்லை, போலிசாரின் அதிகார அத்துமீறல்கள் தொடர்பான அறிகுறிகள் குறைந்து வருவதற்கான அறிகுறிகளையும் காண முடியவில்லை.
“தடுப்புக் காவலில் மரணங்கள், தொடர் தடுத்து வைப்பு மற்றும் போலிஸ் துப்பாக்கிச் சூடுகள், பொறுப்பற்ற நிலையில் அல்லது மேற்பார்வை இல்லாமல் இன்றுவரை தொடர்கின்றன,” என்று சுவாராம் தலைமை நிர்வாக அதிகாரி சிவன் துரைசாமி கூறினார்.
காவலில் இருந்தபோது தாக்கப்பட்டு, இறந்ததாகக் கூறப்படும் கணபதியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு மத்தியில் சுவாராம் இந்த அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
கணபதி கடந்த மாதம் ஏப்ரல் 18-ஆம் தேதி, செலாயாங் மருத்துவமனையில் இறந்தார். பிரேதப் பரிசோதனையில், அவரது கால்கள் மற்றும் தோள்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதாக அவரின் குடும்ப வழக்கறிஞர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012-இன் (சோஸ்மா) கீழ், 828 நபர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டதாக சுவாராமின் ஆவணங்கள் கூறுகின்றன. மேலும், 667 பேர் குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போகா) கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“தொற்றுநோய்கள் மற்றும் இயக்கக் கட்டுப்பாடுகள் இத்தகையச் சட்டங்கள் பயன்பாட்டை மெதுவாக்காது, அவை பெரும்பாலும் “குற்றத் தடுப்பு” அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன,” செவன் கூறினார்.
தேசியக் கூட்டணி அரசாங்கம், கருத்து வேறுபாடுகளைப் பொறுத்துக்கொள்ள அவ்வளவாக விரும்பவில்லை என்றும், பொது விமர்சனங்களைக் குறைக்கவும் தடுக்கவும் அடக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்த அது தயங்கவில்லை என்றும் சிவன் கூறினார்.
“தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன், பிரிவு 233-ன் கீழ், மொத்தம் 98 பேர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுள்ளது அல்லது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என சுவாராம் ஆவணப்படுத்தியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு, 1948-ஆம் ஆண்டு தேசத் துரோகச் சட்டத்தின் கீழ், 24 வழக்குகள் விசாரிக்கப்பட்டன, கைது செய்யப்பட்டன, வழக்குத் தொடரப்பட்டன அல்லது குற்றவாளியாகக் கருதப்பட்டன, இது 2016-க்குப் பிறகு பதிவாகிய அதிகபடியான எண்ணிக்கையாகும்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) காரணமாக, கடந்த ஆண்டு ஒன்றுகூடுதல் அல்லது பேரணிகளுக்கான சுதந்திரம் கடுமையாக தடைசெய்யப்பட்டதாக சிவன் கூறினார்.
இருப்பினும், அமைதியான ஒன்றுகூடல் தொடர்பில் 25 பேர் விசாரணை செய்யப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.
பி.கே.பி. அமலாக்கம், மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களின் அவலநிலையையும் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் கூறினார்.
“பி.கே.பி. அமலாக்கம் வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் சுரண்டல்களை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், அவை தொடர்ந்து சமூக களங்கத்தையே எதிர்கொள்கின்றன. காரணம், வெளிநாட்டு தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்குச் சில பாதுகாப்பை வழங்கும் சட்டத்தைச் சீர்திருத்த அல்லது நடைமுறைப்படுத்துவதற்கான உடனடி முயற்சிகள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை,” என்றார் சிவன்.