மலேசிய ஆயுதப்படை வீரர்கள் சங்கம் (வெதரன்), அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ) போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன் தலைவர், கேப்டன் ஷாருட்டின் ஒமர் கூறுகையில், இதுவரை எழுப்பப்பட்ட பிரச்சினைகளையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் பலவீனத்தையும் அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வெதரன் கண்டறிந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
“குறைந்தது 50 மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற இடங்களிலும் வெதரன் வேட்பாளர்களை நிறுத்த திட்டுமிட்டுள்ளது.
“… தேசிய செழிப்பு கட்சி (பார்ட்டி கெமக்முரான் நெகாரா – கெமக்முரான்) என்று அழைக்கப்படும் கட்சியை நிறுவுவதற்காக, சங்கங்களின் பதிவாளருக்கு (ஆர்.ஓ.எஸ்.) ஒரு விண்ணப்பத்தை வெதரன் சமர்ப்பித்துள்ளது, இது ஆர்.ஓ.எஸ். ஒப்புதலுக்காக இன்னும் பரிசீலனையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.
ரோயல் சுலன் டாமான்சாரா தங்கும் விடுதியில், நேற்று நடைபெற்ற `நாடாளுமன்றத்தை நோக்கி படைவீரர்கள் அணிவகுப்பு` (Veterans’ March to Parliament) என்றச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
ஆர்.ஓ.எஸ்.-க்கு விண்ணப்பம் இரண்டு மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார், எனவே ஜிஇ15-க்கு முன்னதாக, ஓர் அரசியல் கட்சியாக கெமக்முரானின் விண்ணப்பத்தை அங்கீகரிக்குமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
தனது வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவதை மிகவும் வசதியாக கருதிய போதிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களுடன் அதே நோக்கத்தைக் கொண்டிருக்கும், அதாவது மக்களின் தலைவிதியைப் பாதுகாக்கவும் போராடவும் எண்ணும் பிற அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை,.
வெதரன் தனது வேட்பாளர்களை நாடு தழுவிய அளவில் நிறுத்துவதற்கு ஒரு மூலோபாய ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும், பெரும்பான்மையான இராணுவ வீரர்கள் கடமையில் இருக்கும் பகுதிகளுக்கும், இராணுவ வீரர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
“அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில், நாங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ள பகுதிகளில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
“நாங்கள் (கெமக்முரான்) இராணுவ வீரர்களை மட்டுமல்ல, எல்லா மலேசியர்களையும் எங்களுடன் சேர அழைக்கிறோம்.
“முன்னதாக, வெதரன் மூத்த வழிகாட்டியான லெப்டினென்ட் ஜெனரல் நவி அலியாஸ், இது ஒரு வரலாற்றுப்பூர்வமான நாள் என்று விவரித்தார். தங்கள் சேவை காலம் முழுவதும் அரசியல் சார்பற்ற நிலையில் இருந்த இராணுவ வீரர்கள், தற்போது ஓய்வு பெற்றபின் ஜிஇ-இல் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளனர்.
“நாங்கள் இராணுவத்தில் இருக்கும்போது, நாட்டுக்கு, யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்குச் சேவை செய்கிறோம். ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு நாங்கள் சேவை செய்கிறோம். நாங்கள் அரசியல் சாராதவர்களாக இருக்கிறோம்.
“நாங்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறும்போது, இராணுவ வீரர்கள் அரசியல் சாராதவர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உள்ளனர். இருப்பினும், சிலர் அரசியல் கட்சிகளில் சேருகிறார்கள், அதுவும் சரிதான்.
“ஆனால், வரலாற்றில் முதல்முறையாக, இராணுவ வீரர்கள் ஓர் அரசியல் கட்சியை உருவாக்க ஒன்றுபட்டுள்ளனர்,” என்று 78 வயதான அவர் கூறினார்.
தற்போதைய அரசியல்வாதிகளைப் போலல்லாமல், இராணுவத்தில் பணியாற்றும் போது ஊழலின் அர்த்தத்தை இராணுவ வீரர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றும், இது மக்களுக்குச் சேவை செய்வதற்கு ஒரு தகுதியாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.
“இந்த நாட்டிற்குச் சேவை செய்ய, நாங்கள் உயிர் மற்றும் இரத்தத்துடன் எங்கள் இளையப் பருவத்தை அர்ப்பணிக்கிறோம்.
“நான் கிட்டத்தட்ட பல முறை இறக்கும் தருவாயில் இருந்திருக்கிறேன். நல்ல வேளையாக, கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார், நான் இன்று இங்கே இருக்கிறேன், இன்னும் கொஞ்ச நாளில், கிட்டத்தட்ட 80 ஆண்டுகள்.
“ஆனால் நாட்டுக்குச் சேவை செய்வதற்கான எனது ஆர்வம் இன்னும் இருக்கிறது. (இதன் காரணமாக) வெதரன்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்வதை நான் ஆதரிக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.