நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) கீழ் உள்ள சிலாங்கூர் பள்ளிகளுக்கான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) உடனடியாக விவரிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.
சிலாங்கூரில் ஆறு மாவட்டங்கள், நாளை முதல் மே 17 வரை பி.கே.பி.யின் கீழ் வைக்கப்படும் என்ற அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அழைப்பு வந்துள்ளது.
இதுவரையில், மலேசியக் கல்வி அமைச்சு இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கான எஸ்ஓபி-ஐ இதுவரை அறிவிக்கவில்லை என்பதை பி.எச். கல்வி செயற்குழு இன்று கூறியுள்ளது.
“பி.கே.பி. பகுதிக்குட்பட்ட பள்ளிகள் உடனடியாக மூடப்படுமா அல்லது ஹரி ராயா விடுமுறைகள் தொடங்கும் வரை தொடருமா?
“சில பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்தவிருப்பதால், கல்வியமைச்சு உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்,” என்று அக்குழு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சின் ஆரம்ப அறிவிப்புகள், பள்ளிகள் தேர்வு அட்டவணையை மறுசீரமைப்பதற்கும் மாணவர்களின் கவனத்தைப் பராமரிப்பதற்கும் எளிதாக்கும் என்று அக்குழு மேலும் கூறியது.
மேலும் இது, குடும்ப நிர்வாகத்தை மறுசீரமைக்க பெற்றோருக்கும் உதவக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
மேலும், அதே அறிக்கையில், விடுதிகளிலிருந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் செயல்முறையை விளக்குமாறும் அக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியது.
“தங்கள் குழந்தைகளை விடுதிகளில் இருந்து அழைத்துச் செல்ல வேண்டிய பெற்றோர்கள், குறிப்பாக பி.கே.பி. அமலாக்கத்தோடு இணைந்த இந்தப் பெருநாள் காலத்தில், மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி வழங்கப்படுமா,” என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
“அறிவிப்பு கடிதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பெற்றோர்கள் காவல் நிலையம் செல்வதைத் தவிர்க்கலாம்,” என்றும் அவர்கள் கூறினர்.
சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்களில் – உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோல லங்காட் மற்றும் செப்பாங் – இன்று தொடக்கம் மே 17 வரையில், பி.கே.பி. அமல்படுத்தப்படும் என்ற தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்) முடிவை, மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று அறிவித்தார்.