15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) பெர்சத்துவின் பாரம்பரிய இடங்களில் அம்னோ போட்டியிட்டால், பெர்சத்து தோல்வியடையும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட் கணிக்கிறார்.
“அம்னோ அனைத்து இடங்களிலும் போட்டியிடும் என்று மொஹமட் (ஹாசன்) கூறுகிறார், அம்னோவுடன் இல்லாமல் போனால் பெர்சத்து அவர்களின் இடங்களை இழக்க நேரிடும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் நேற்றிரவு மலேசியாபோஸ்ட் செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மார்ச் மாதம், பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின், ஜிஇ15-இல் இடங்களை விட்டுக்கொடுக்க அம்னோ தயாராக இல்லை என்றால், கடந்த பொதுத் தேர்தலில் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மீண்டும் போட்டியிடும் என சூசகமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசான், அனைத்து அம்னோ இடங்களிலும் கட்சி போட்டியிடும் என்றும், அவற்றை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அம்னோ இனி அவர்களுடன் இல்லை என்பதால், அடுத்த ஜிஇ-யில் கட்சி தோல்வியடையக்கூடும், எனவே பெர்சத்து தலைவர்கள் தங்கள் போராட்டத்தின் அடிப்படைகளுக்குத் திரும்பும்படி தான் அறிவுறுத்தியுள்ளதாக மகாதீர் கூறினார்.
இருப்பினும், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவிகளை நேசித்ததாலும், அரசாங்கப் பதவிகளின் வழி அனுபவித்த பணத்தாலும் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.
“அமைச்சர்களுக்கு மாதம் RM70,000 சம்பளம், எனவே நாம் மாதா மாதம் அதனை அவர்களுக்குத் தந்தால் அவர்கள் திரும்பி வருவார்கள்,” என்று மகாதீர் கூறினார்.
அம்னோ 4 குழுக்களாகப் பிரிந்தது
இதற்கிடையில், அம்னோ நான்கு குழுக்களாகப் பிரிந்துகிடப்பதால், அடுத்த ஜிஇ-யை எதிர்கொள்வதில் அம்னோ தனியாக நகர முடியாது என்றும் மகாதீர் கூறினார்.
“அம்னோவிலிருந்த சிலர் பெர்சத்துவுக்குச் சென்றுவிட்டனர், இன்னும் சிலர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை நிராகரித்து, தற்போதைய அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி ஜாஹிட்டை ஆதரிப்பவர்கள்.
“நஜிப்பை ஆதரிக்கும் மற்றொரு பிரிவு மற்றும் துணைத் தலைவர் முகமது ஹசான் அல்லது ஹிஷாமுடின் ஹுசைன் போன்ற பிற தலைவர்களை ஆதரிக்கும் இன்னொரு பிரிவு,” என்று அவர் கூறினார்.
“எனவே, தனியாக இருந்தால், ஜிஇ15-இல் அம்னோ பெரிய அளவில் வெல்ல முடியாது,” என்றார் அவர்.