டாக்டர் எம் ஏன் ஹமீட் படோரை ஐ.ஜி.பி.யாக நியமித்தார்

இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றபோது, தேசியக் காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோரை நியமித்த தனது முடிவை டாக்டர் மகாதீர் மொஹமட் ஆதரித்தார்.

முறைகேடு மற்றும் ஊழலால் களங்கப்படுத்தப்பட்ட காவல்துறையின் உருவத்தை மீட்டெடுக்கும் திறன், அப்துல் ஹமீட்டிடம் இருப்பதாக நம்பியதால்தான் அவரைத் தான் தேர்வு செய்ததாக அந்த முன்னாள் பிரதமர் கூறினார்.

“அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு நான் அவரைச் சந்தித்தேன்… அவர் காவல்துறையில் நிறைய முறைகேடுகள், நிறைய ஊழல்கள் இருக்கிறது என்று கூறினார். (அந்த நேரத்தில்) அவர் சிறப்புப் பிரிவில் (எஸ்.பி.) இரண்டாம் இடத்தில் இருந்தார், எனவே அவர் எஸ்.பி.க்குத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும், ஆனால் நிறைய முறைகேடுகள் இருப்பதால் அவர் அதனை விரும்பவில்லை.

“பதவி உயர்வுக்கான வாய்ப்பு இருக்கும்போது, பதவியில் இருந்து விலக யாரும் எண்ண மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், (ஆனால்) அவர் அதைச் செய்ய தயாராக இருந்தபோது, அவர் தனது வேலையைச் சிறப்பாகச் செய்வார் என்று நான் நினைத்தேன்.

“அதனால்தான் அவர் ஜூனியர் என்றாலும், அவர் ஓய்வு பெற்றிருந்தாலும், அவரை மீண்டும் ஒரு ஐஜிபி-யாக பதவி வகிக்க நான் அழைத்தேன்,” என்று அவர் நேற்று இரவு மலேசியாபோஸ்டுக்கு அளித்த பேட்டியில் மகாதீர் கூறினார்.

ஓய்வுபெற்ற மொஹமட் புஸி ஹருனுக்குப் பதிலாக, அப்துல் ஹமீட் 2019, மே 2-ம் தேதி ஐ.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

தேசிய முன்னணி நிர்வாகத்தின் போது, ​​எஸ்.பி.யின் துணை இயக்குநராக இருந்த ஹமிட் படோர் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டார், அது 1எம்டிபி ஊழல் குறித்து விசாரிப்பதில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பானது என்று அவர் கூறினார்.

பி.எச். 2018 ஜிஇ-ஐ வென்ற பிறகு, எஸ்.பி. இயக்குநராக மீண்டும் பணியாற்றுவதற்கு முன்னதாக அவர் ஓய்வு பெற்றார்.

மே 3-ம் தேதி, ஐ.ஜி.பியாக தனது கடைசி செய்தியாளர் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினை “தாக்கி”, போலிஸ் படையில் அரசியல் தலையீடு குறித்த பிரச்சினையை எழுப்பியபோது அப்துல் ஹமீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் கருத்து தெரிவித்த மகாதீர், காவல்துறைக்குத் தலைமையேற்ற போது, அவ்வணியில் நடந்த முறைகேடுகளை ஒழிக்க அப்துல் ஹமீட் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

“அவர் ஐ.ஜி.பி.யாக இருந்த வரை, பல போலிஸ் அதிகாரிகள் ஊழல் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர், இது இதற்கு முன் நடந்ததில்லை. இது (இதற்கு முன்) அதிக ஊழல் நடந்திருக்காமல் இருக்கலாம், இப்போது நிறைய ஊழல்கள் நடப்பது நமக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், போலீஸ் நிர்வாகத்தில் அமைச்சர் தலையிடுவது பொருத்தமற்றது என்றும் மகாதீர் வர்ணித்தார்.

அமைச்சரும் ஐ.ஜி.பியும் நல்ல உறவைக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் அணியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அல்ல என்றார்.

“எனவே, ஐ.ஜி.பிக்கும் அமைச்சருக்கும் இடையிலான உறவு நல்லது, அமைச்சர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாவிட்டால் … அவர் (ஹம்ஸா) தன்னால் (தேர்ந்தெடுக்கப்பட்டவர்) அனைவரையும் கட்டாயப்படுத்த விரும்புகிறார்,” என்று மகாதீர் மேலும் கூறினார்.