நிலக் குத்தகை : எம்.பி. அண்மைய முன்னேற்றங்களைத் தெரியபடுத்த வேண்டும் – தோட்டக் குடியேறிகள் வலியுறுத்து

பெஸ்தாரி ஜெயா, தென்னமரம் தோட்ட நிலக் குத்தகை பிரச்சினை குறித்து விசாரிப்பதாக, சிலாங்கூர் அரசாங்கம் உறுதியளித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, மந்திரி பெசார் அமிருடின் ஷாரியிடம் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்குமாறு குடியேறிகள் இன்று கேட்டுக் கொண்டனர்.

அண்மையில், அத்தோட்டத்தில் வேலைகளை மேற்கொள்ள, இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை காரணமாகப் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட குடியேறிகள் மாநில அரசிடம் பதில் கோரினர்.

“உள் விசாரணை நடத்துவதாக மாநில அரசு உறுதியளித்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது. இருப்பினும், இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

“நிலப்பிரச்சினை விசாரணையின் சமீபத்திய நிலையை மந்திரி பெசார் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று குடியேறிகளின் பிரதிநிதி பாகார் யூசூஃப் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள நிலத்தில் பணிபுரிந்து வரும் 52 வயதான பாகார், சிலாங்கூர் அரசாங்கத்தின் வாக்குறுதியை மீறி சம்பந்தப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களும் தோட்டத்தில் வேலைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

“மாநில அரசு விசாரணையை மெற்கொள்ள விரும்பினால், அங்குள்ள அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

“இந்த விவகாரத்தை விசாரிப்பதாக மாநில அரசு கூறும்போது இரண்டு நிறுவனங்கள் இன்னும் எவ்வாறு செயல்பட முடிகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பதிவுக்காக, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, நிலத்தை இரண்டு தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்த அரசாங்கத்தின் நடவடிக்கையினால் ஏமாற்றமடைந்த தென்னமரம் தோட்டக் குடியேற்றவாசிகள், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் நோ ஒமர், கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார் இராமநாயுடு மற்றும் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர்களுடன் இணைந்து ஒரு போராட்டம் நடத்தினர்.

சிலாங்கூர் அம்னோ தலைவரான நோ, அத்தோட்ட நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள புதிதாக நிறுவப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு, மாநில அரசு 21 ஆண்டுகள் குத்தகை வழங்கியுள்ளதாகக் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் குத்தகைக்கு வழங்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, அதாவது, 2018 ஜூலை மாதம் அந்த நிறுவனங்கள் நிறுவப்பட்டதாக நோ கூறினார்.

மேலும், இரு நிறுவனங்களும் ஒரே நபருக்குச் சொந்தமானவை என்றும், ஒரே முகவரியைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குடியேற்றவாசிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 9-ம் தேதி, அமிருடினின் அரசியல் செயலாளர் ஜுவாரியா சுல்கிஃப்லி ஓர் அறிக்கையை வெளியிட்டார், நிலப் பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டுகளை மாநில அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டது என்றும், சிலாங்கூர் மாநில நிலம் மற்றும் சுரங்க அலுவலகத்தால் உள் விசாரணை மற்றும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மற்றொரு குடியேற்றக்காரரான லோகராஜன் ராமன், 59, மாநில அரசுக்குத் தெரியாமல் நிலத்தை எவ்வாறு குத்தகைக்கு விடப்பட்டது என்பதனை அமிருடின் விளக்க வேண்டும் என்றார்.

2008-ஆம் ஆண்டு முதல், சிலாங்கூருக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாநிலச் செயற்குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றார் அவர்.

“அப்படியானால், இந்தப் பிரச்சனையின் சூத்திரதாரி யார்? மந்திரி பெசாருக்குத் தெரியாமல் அதை எவ்வாறு குத்தகைக்கு விட முடியும்?

“தோட்டக் குடியேற்றவாசிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு, மாநில அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.