1எம்.டி.பி. வழக்கு : ஸ்ரீ ராம் சட்ட நிறுவனத்தை பிரதிநிதிக்கிறார், சுயவிருப்ப பிணக்கு இல்லை

வோங் & பார்ட்னர்ஸ் சட்ட நிறுவனம் மற்றும் அவரது கூட்டாளர் பிரையன் சியா ஹாக் கீ ஆகியோருக்கு எதிராக, 1எம்.டி.பி. தாக்கல் செய்துள்ள 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழக்கில், முன்னாள் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி, கோபால் ஸ்ரீ ராம் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

பெர்னாமா தொடர்பு கொண்டபோது, ​​சிவில் வழக்கில் உள்ள இரண்டு சட்ட நிறுவனங்களின் சார்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் எந்தவொரு சுயவிருப்ப பிணக்கும் இல்லை என்று ஸ்ரீ ராம் கூறினார்.

“எந்தச் சச்சரவும் இல்லை. நடந்து கொண்டிருக்கும் 1எம்.டி.பி-தானோர் (1MDB-Tanore) வழக்கு விசாரணையில் பிரையன் எனது முக்கியச் சாட்சியாக இருக்கிறார்.

“அவர் வோங் & பார்ட்னர்ஸ் சட்ட நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் இந்த வழக்கின் முக்கிய இலக்கு.

“இரண்டு வழக்குகளிலும் நான் அவரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்,” என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது 1எம்.டி.பி. ஊழல் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவியல் வழக்கு விசாரணையில் அரசு தரப்பு குழுவை வழிநடத்திய ஸ்ரீ ராம் கூறினார்.

மே 10 அன்று, 1எம்.டி.பி. மற்றும் அதன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் சென். பெர். இரண்டும், 22 சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதை நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது, இதில் பல்வேறு உள்ளூர் தரப்பினர் சம்பந்தப்பட்ட சுமார் RM300 மில்லியன்கள் அடங்கும்.

மே 7-ம் தேதி, 1எம்.டி.பி. 6 மற்றும் எஸ்.ஆர்.சி. 16 சம்மன் ரிட்களை பதிவு செய்ததாக நிதியமைச்சு சொன்னது.

வோங் & பார்ட்னர்ஸ் சட்டநிறுவனம் மற்றும் பிரையனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மீட்டெடுப்பது மற்றும் மோசடியில் அவர்கள் வகித்ததாகக் கூறப்படும் பங்கிற்கு RM664,821.21 சட்ட கட்டணங்களைச் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.

  • பெர்னாமா