#பெராயாடிஜாலான்ராயா : பி.என்.-க்கு எதிராக மக்களின் கோரிக்கைகள்

நோன்புப் பெருநாள் வாழ்த்து கூறும் செய்தியை, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக மலேசியர்கள் சிலர் பயன்படுத்திக் கொண்டனர்.

பெருநாள் கொண்டாட்டங்களின் நடுவே, “நாடாளுமன்றத்தைத் திறவுங்கள், அவசரநிலையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், தோல்வியடைந்த அரசாங்கம்” போன்ற முழக்கங்களுடன் அவர்கள் வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

#BerayaDiJalanRaya (#பெராயா டி ஜாலான் ராயா) என்ற ஹேஷ்டேக்குடன், சமூக ஊடகப் பிரச்சாரத்தில் பங்கேற்ற சிலர், கோவிட் -19 தொற்றுநோயை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறியதற்குச் சான்று, தங்கள் குடும்பங்களுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாட வீடு திரும்ப முடியாமல் போனது என்று விவரித்தார்.

 

இன்னும் சிலர், வாக்கு18-ஐ உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

நேற்றைய அந்த இயங்கலை பிரச்சாரத்தை, வாக்கு18 இளைஞர் குழு மற்றும் மலேசிய ஜனநாயகக் கூட்டணி (மூடா) உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் ஒற்றுமை செயலகம் ஏற்பாடு செய்தது.

அவர்களின் ஆறு கோரிக்கைகளை, பி.என். நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துவதே அப்பிரச்சாரத்தின் நோக்கமாகும் : அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருதல்; நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுதல்; உடனடியாக வாக்கு18-ஐ நிறைவேற்றுதல்; மக்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்தல்; அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான கல்வியை வழங்குதல்; சட்டத்தை செயல்பாடுகளில் இரட்டைத் தரநிலைகள் மற்றும் ஒருதலைபட்சம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும்; மற்றும் சபா மற்றும் சரவாக் உரிமைகளை மேம்படுத்துதல்.

பி.கே.பி. 3.0 அமலாக்கம் புத்ராஜெயா தொற்றுநோயை எதிர்த்துப் போராடத் தவறியதைக் குறிக்கிறது என்று அக்கூட்டணி வாதிட்டது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க அவசரநிலை பிரகடனத்தால் இயலாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

முன்னதாக, இந்தக் குழு கோலாலம்பூரில், நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் “புகா புவாசா புகா பார்லிமென்” (நோன்பு திறங்கள், நாடாளுமன்றத்தைத் திறங்கள்) ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜனவரி முதல் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.