‘தோல்வியுற்ற அரசு’ எதிர்ப்பு – போலீசார் 20 ஆண்களைத் தடுத்து வைத்தனர்

நேற்று சமூக ஊடகங்களில் பரவிய பாரிட் ராஜா, பத்து பஹாட் கலவரச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 20 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் சராசரியாக 16 முதல் 28 வயதுடையவர் என்றும், அனைவரும் உள்ளூர்வாசிகள் என்றும் பத்து பஹாட் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.

“இதுவரை, 20 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

“அவர்கள் அனைவரும் மே 17 திங்கள் வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் தெரிவித்தார்.

நேற்றைய சம்பவம் அதிகாலை 2.00 மணியளவில், பெக்கான் பாரிட் ராஜாவின் சாலை சந்திப்பில் கி.மீ. 22.5 ஜாலான் பத்து பஹாட் – குளுவாங் என்ற இடத்தில் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

“சுமார் 40 பேர் அடங்கியக் இந்தக் குழு, 15 நிமிடங்கள் சாலையின் வழியாக சென்ற மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களைப் பயன்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது, ‘தோல்வியுற்ற அரசு’ என்றப் பதாகைகளை ஏந்தியிருந்த அவர்கள் பட்டாசுகளை எரித்து வாகனப் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் .

“சம்பவம் முடிந்த உடனே, அந்தப் பதாகை கோங் நான் சீனப் பள்ளிக்கு முன்னால் உள்ள பாலத்தில் தொங்கவிடப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இஸ்மாயிலின் கூற்றுப்படி, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 144, 269, 505(b) மற்றும் வெடிப்பொருள் சட்டத்தின் பிரிவு 8, தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு 2021 (சட்டம் 342) விதிமுறை 17 (1) சாலைப் போக்குவரத்து சட்டப்பிரிவு 48 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்டும்.

மேலதிக விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

நேற்றிரவு, விசாரணைக்கு உதவ 21 வயதுடைய ஒருவரைக் கைது செய்ததாகவும் போலீஸ் கூறியது.