“தோல்வியுற்ற அரசு” பதாகையுடன், பட்டாசு வெடித்து எதிர்ப்பைக் காட்டிய சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு, ஜொகூர் பக்காத்தான் ஹராப்பான் இலவச சட்ட உதவியை வழங்கியுள்ளது.
அந்த மே 13 சம்பவத்தில், பத்து பஹாட் போலீசார், இளையர்கள் உட்பட 20 இளைஞர்களைக் கைது செய்திருந்தனர். அவர்களின் தடுப்புக் காவல் நாளை முடிவடையவுள்ளது.
“பாரிட் ராஜாவில் நடந்த அச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் 3 குடும்பங்களை ஜொகூர் பி.எச். தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
“கோவிட் -19 உட்பட, இந்த நேரத்தில் தேசியப் பிரச்சினைகளை நிர்வகிக்க அரசாங்கம் தவறியிருப்பது குறித்த, மலேசியர்களின் அதிருப்தியின் வெளிப்பாடே பாரிட் ராஜாவில் நடந்த அச்சம்பவத்திற்குக் காரணம் என்று ஜொகூர் பி.எச். கருதுகிறது.
“இந்தத் தோல்வியின் விளைவாக, வாழ்க்கைச் செலவினங்களோடு, சாதாரண மக்களின் பொருளாதாரப் பிழைப்புக்கு இரையாகும் இரட்டைத் தரக் கொள்கைகள் அமலாக்கமும் மக்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது,” என்று அது இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதற்கும், மக்களுக்கு உதவும் கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் உடனடியாக திறக்க வேண்டும் என்றும் பி.எச். கோரிக்கை விடுத்தது.
“அதே நேரத்தில், இந்தக் கடினமான நேரத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் பாரிட் ராஜா சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு ஜொகூர் பி.எச். புரோபொனோ சட்ட சேவைகளை வழங்கும்,” என்றும் அவ்வறிக்கை மேலும் கூறியது.
அந்த அறிக்கையில், ஜொகூர் அமானா தலைவர் அமினோல்ஹுடா ஹசன், ஜொகூர் பி.கே.ஆர். தலைவர் சையத் இப்ராஹிம் சையத் நோ மற்றும் ஜொகூர் டிஏபி தலைவர் செனட்டர் லீயு சின் தோங் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள், 16 முதல் 28 வயதுக்கு உட்பட்ட உள்ளூர்வாசிகள் என்று பத்து பாஹட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.
இஸ்மாயிலின் கூற்றுப்படி, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 144, 269, 505(b) மற்றும் வெடிப்பொருள் சட்டத்தின் பிரிவு 8, தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு 2021 (சட்டம் 342) விதிமுறை 17 (1) சாலைப் போக்குவரத்து சட்டப்பிரிவு 48 ஆகியவற்றின் கீழ் மேலதிக விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.