பாகான் லலாங் கம்போங் ஒராங் அஸ்லியில் இருந்து, மாஹ் மேரி பழங்குடியினர் வெளியேற வேண்டுமென நோட்டீஸ் வழங்கிய சிலாங்கூர் அரசாங்கத்தின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்று ம.சீ.ச. இளைஞர் அணியின் மத்தியச் செயற்குழு உறுப்பினர் சீயு ஷேன் காய் கூறினார்.
சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, ஒராங் அஸ்லி சமூகத்தினர் தங்கள் குடியிருப்புப் பகுதிகளைக் காலி செய்ய வேண்டுமென, பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர். (பி.என்.எஸ்.பி.) மூலம் உத்தரவு பிறப்பித்த சிலாங்கூர் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து சீயு கருத்து தெரிவித்தார்.
“20 ஆண்டுகளாக வசிக்கும் அந்தக் குடியிருப்புப் பகுதி அவர்களின் முழுமையான சொத்து அல்ல என்பதை மாஹ் மேரி பழங்குடி மக்கள் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் பேச்சுவார்த்தைகள், ஒருங்கிணைப்பு மற்றும் முறையான ஏற்பாடுகளை செய்யும் முன்பு வெளியேற அறிவிப்பை வழங்க பிஎன்எஸ்பி எடுத்த முடிவு மிகவும் மனிதாபிமானமற்ற செயல்,” என்று அவர் தனது அறிக்கையில் கூறினார்.
மேம்பாட்டுத் திட்டங்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் என்றாலும், அதற்காக மாஹ் மேரி பழங்குடியினரின் மனித உரிமைகளைத் தியாகம் செய்ய முடியாது என்றார் சீயு.
“இந்தத் திட்டம் இப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
“சிலாங்கூர் மாநில அரசு, இப்பகுதியின் வளர்ச்சிக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல், குறைந்த பட்சம் சம்பந்தப்பட்ட மாஹ் மேரி பழங்குடியினருக்குச் சரியானதைச் செய்ய வேண்டும், பொருத்தமான இழப்பீடு மற்றும் உதவிகளை வழங்குவது உட்பட.
“இல்லையெனில், சிலாங்கூர் மாநில அரசாங்கம் வருமானத்தை மட்டுமே கவனிக்கும், மனிதாபிமானமற்ற ஓர் அரசாங்கமாகக் கருதப்படும்,” என்று அவர் விளக்கினார்.
பாகான் லாலாங் ஒராங் அஸ்லி கிராமத்திலுள்ள மாஹ் மேரி பழங்குடியினரை, அவர்களின் கிராமத்திலிருந்து மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமான பி.என்.எஸ்.பி. நிறுவனம் கட்டாயப்படுத்தி வெளியேற்றுகிறது என்று கூறப்படும் செய்தி அறிக்கையை, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருட்டின் ஷரி நேற்று மறுத்தார்
சம்பந்தப்பட்ட அப்பகுதி, ஒராங் அஸ்லிக்குச் சொந்தமான நில கிராமம் அல்ல என்று கூறப்படுகிறது என அமிருட்டின் தனது கீச்சகம் மூலம் தெரிவித்தார்.
“குறிப்பிடப்பட்ட நிலம், மாஹ் மேரி ஒராங் அஸ்லிக்குச் சொந்தமான கிராமம் அல்ல, ஓரங் அஸ்லி தொழிலாளர்கள், பாகான் லாலாங்கில் வேலை செய்ய வசதியாக, தங்கள் சொந்த கிராமங்களிலிருந்து வெளியாகி, தற்காலிகமாக இங்குத் தங்கியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
உண்மையில், அப்பகுதியிலுள்ள ஒராங் அஸ்லி சமூகம் நிலத்தைக் காலி செய்ய ஒப்புக் கொண்டதாகவும், காலி செய்ய கால நீட்டிப்பு தேவையென விண்ணப்பக் கடிதம் எழுதியுள்ளதாகவும் அமிருட்டின் விளக்கினார்.