பி.கே.பி. எஸ்ஓபியை உயர்க்கல்வி டிஜி மீறினார் – குற்றச்சாட்டுகளைப் போலீஸ் விசாரிக்கும்

கடந்த வியாழக்கிழமை, பொது பல்கலைக்கழகம் ஒன்றில், நன்கொடை வழங்கல் விழா மற்றும் நோன்புப் பெருநாள் விருந்தில் கலந்து கொண்டபோது, ​​உயர்க்கல்வி தலைமை இயக்குநர் (டிஜி) பேராசிரியர் டாக்டர் ஹுசைனி ஒமர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, நேற்று செய்தி தளம் ஒன்று வெளியிட்ட கட்டுரையைத் தொடர்ந்து, போலிஸில் புகார் செய்யப்பட்டது; அதனை அடுத்து, இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகச் செர்டாங் மாவட்டக் காவல்துறையின் செயற்பாட்டில் இருக்கும் தலைவர் சுப். மொஹமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் 13-ம் குடியிருப்புக் கல்லூரியில் நடைபெற்ற அவ்விழாவில், ஹுசைனி எஸ்ஓபியை மீறியதாக அந்தக் கட்டுரை கூறியதாக அவர் சொன்னார்.

“இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர், அவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டன,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பி.கே.பி. எஸ்ஓபியை மீறியதற்காக, விதி 17 பி.யூ (A) 225/2021-இன் படி விசாரணை நடத்தப்படுவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், வருகையாளருக்கு RM2,000 மற்றும் ஏற்பாட்டாளருக்கு RM10,000 வரை தண்டம் விதிக்கப்படலாம் என்று மொஹட் ரோஸ்டி கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்கள், உடனடியாக அரசு துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றார் அவர்.

-பெர்னாமா