உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய மருத்துவமனையான சுங்கை பூலோ மருத்துவமனையில் உடல்களை வைக்க கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
“சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறை, கோவிட் -19 காரணமாக இறந்தவர் சடலங்களை வைக்க கூடுதலாக ஒரு சிறப்பு கொள்கலனை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
இன்று (நேற்று), மருத்துவமனையில் மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தனது கீச்சகத்தில் தெரிவித்துள்ளது.
அத்துணுக்கில், ஒரு வெள்ளை நிறக் கொள்கலனில், தொழிலாளர்கள் உள்ளே சடலங்களை வைக்கும் இடத்தை நிறுவும் படமும் இணைக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் கோவிட் -19 காரணமான இறப்புக்களின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்தது.
ஏப்ரல் மாதத்தில் நேர்வுகள் அதிகரிப்பதற்கு முன்னர், ஒரு நாளில் 30-க்கும் மேற்பட்ட இறப்புகளை நாடு பதிவு செய்ததில்லை.
இருப்பினும், கடந்த புதன்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட இறப்புகள் சம்பவித்துள்ளன.
இதுவரை, ஒரு நாளைக்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் கடந்த சனிக்கிழமையன்று 44 இறப்புகளுடன் நிகழ்ந்தன – அவற்றில் 26 இறப்புகள் சிலாங்கூரில் பதிவானவை.
கடந்த வாரம், கோவிட் -19 தொற்றின் விளைவாக மொத்தம் 202 பேர் இறந்தனர், நாட்டில் இதுவரையில் மொத்தம் 1,902 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) சிகிச்சை பெறும் நோயாளிகளும் 520 பேருடன் மிக உயர்ந்த எண்ணிக்கையில் உள்ளனர்.