மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நேர்வுகள் பதிவாகி வருவதை அடுத்து, சிலாங்கூரில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) செயல்படுத்த வேண்டியிருக்கலாம் என்று சுகாதார அமைச்சு கருதுகிறது.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பி.கே.பி.யால், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க இயலாது எனக் கருதப்படுவதால், கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளை முன்மொழிய வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
“ஆரம்பக் கட்டத்தில், சிலாங்கூரில் பி.கே.பி. ஆறு மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது, ஆனால் பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்தது. இது மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டத்தைத் தடைசெய்தது.
“பி.கே.பி. அமலாக்கம் அதிகமான சோதனைகள் மற்றும் கண்டறிதல்களை (தொடர்புகள்) நடத்த சுகாதார அமைச்சுக்கு உதவுகிறது, அத்துடன் பாதிப்புகள் அதிக அளவில் உள்ள பகுதிகளில், ஆர்.டி.கே. ஆன்டிஜென் பரிசோதனையை நடத்த மாநில அரசுடன் ஒத்துழைக்க முடிகிறது,” என்று அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
“அரசாங்கத்திற்கு இன்னும் கடுமையான எஸ்ஓபி-க்கள் மற்றும் பி.கே.பி-களுக்கு முன்மொழிய வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
“பி.கே.பி.யை முழுமையாக அமல்படுத்துவது கருத்தில் கொள்ளக்கூடிய ஒரு விஷயம்,” என்று அவர் இன்று ஒரு இயங்கலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
தற்போது, மே 12 முதல் நாடு முழுவதும் பி.கே.பி. அமல்படுத்தப்பட்ட பின்னரும், சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளைப் பதிவு செய்து வருகிறது.