இரண்டு மில்லியன் இளைஞர்கள் RM150 மின்-பணக்கடன் பெறலாம்

தகுதிவாய்ந்த சுமார் இரண்டு மில்லியன் மலேசிய இளைஞர்களுக்கு, ஜூன் 1 முதல் ஜூலை 22 வரை இபெலியா (eBelia) திட்டத்தின் கீழ், RM150 மின்-பணக் கடன் (e-tunai) பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் தொகையை ஜூலை 31 வரையில் செலவிடலாம்.

“தகுதியுள்ளவர்கள் இ-ரொக்க (e-tunai) விண்ணப்பத்தில், தங்கள் கணக்கைப் புதுப்பிக்க அல்லது 2021 ஜூன் 1-க்கு முன் இ-ரொக்க விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

“பதிவுசெய்யப்பட்ட உள்ளூர் உயர்க்கல்வி நிறுவனங்கள் (ஐபிடி) மற்றும் தொடர்புடைய அரசாங்கத் தரவுத்தளங்களுடன், இளைஞர்களின் தரவு சரிபார்க்கப்படும்,” என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிக்பே (BigPay), பூஸ்ட் (Boost), ஷோபீ பே (ShopeePay) மற்றும் டச் ‘என் கோ இ-வாலட்’ (Touch ‘n Go e-wallet) ஆகிய நான்கு மின்-பணச் சேவைகள் மூலம் இபெலியா பணத்தைக் கோரலாம்.

“ஈ-ரொக்க சேவை வழங்குநர்கள், மின்-பணக் கடன் கோரிக்கைக்குக் ‘காஷ்பேக்’ (cashback), பற்றுச்சீட்டு மற்றும் புள்ளிகள் போன்ற கூடுதல் சலுகைகளைப் பிரச்சாரக் காலத்தில் வழங்கலாம்,” என்றும் அது விளக்கியது.

நிதி அமைச்சின் கூற்றுப்படி, தகுதியான இளைஞர்கள் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் டிப்ளோமா மட்டத்தில் பயிலும் முழுநேர மாணவர்கள் அல்லது பதிவுசெய்யப்பட்ட உள்ளூர் உயர்க்கல்விக் கூடங்களில் பயிலும் எஸ்.கே.எம்.4 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

சமீபத்தில், மக்களை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், பொருளாதாரச் சுமையை எளிதாக்குவதற்கும் ஐபிடி இளைஞர்களிடையேப் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், பிரதமர் முஹைதீன் யாசின் RM300 மில்லியன் ஒதுக்கீட்டைக் கொண்ட ஈபெலியா திட்டத்தை உருவாக்கினார்.

  • பெர்னாமா